

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான தொழில்நுட்பக் கண்காட்சி பிப்.27 தொடங்கி நேற்று வரை நடந்தது. இதில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான பரிசளிப்பு விழா சென்னை கிண்டி பல்கலை. வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
அண்ணா பல்கலைக்கழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீடுக்கு இடையூறு ஏற்படாதபடி மத்திய அரசின் உயர்கல்வி நிறுவன சிறப்பு அந்தஸ்தை பெறும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதேபோல், சிறப்பு அந்தஸ்தால் எதிர்காலத்தில் வரக்கூடிய நிதி சிக்கலை தவிர்க்க, முன்கூட்டியே துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் அறிக்கைப்படி விரைவில் 3-வது ஆலோசனைக் கூட்டம் நடக்கும்.
இரண்டாக பிரிக்கப்பட்டாலும் தொடர்ந்து அண்ணாவின் பெயரிலேயே 2 பல்கலைக்கழகங்களும் இயங்கும் என்றார்.