

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மாணவர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். பின்னர் அதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பினால் ஜன நாயக ரீதியில் தெரிவியுங்கள் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டார்.
சென்னை ஐஐடியில் “2020-ம் ஆண்டு முதல் 2030-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் இந்தியாவின் லட்சிய நோக்கம்" என்பது குறித்து கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டு ஐஐடி மாணவ, மாணவியருடன் கலந்துரையாடியதுடன், அவர் களது கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மாணவர்கள் தயவுசெய்து குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி படிக்க வேண்டும். அதன் அம்சங்கள் குறித்து முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்காகவே குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதைத்தான் காந்திஜியும் விரும்பினார்.
எனவே, குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன? தேசிய மக்கள் பதிவேடு என்றால் என்ன?என்று படித்துப் புரிந்து கொள்ளுங்கள். அதன்பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள். அவை குறித்து கருத்துகூற விரும்பினால் அதை ஜனநாயக முறைப்படி தெரிவியுங்கள். இலங்கை அகதிகளைப் பொருத்தவரை அவர்கள் தங்களது சொந்தநாட்டுக்குச் சென்று மரியாதையுடன் வாழவே விரும்புகிறார்கள்.
பெற்றோரை நினைத்து பாருங்கள்
மாணவர்கள் அரசியலுக்கு வரலாம். அதற்கு முன்னதாக முதலில் படிப்பை நல்லமுறையில் முடியுங்கள். போட்டி நிறைந்த இந்த உலகில் கஷ்டப்பட்டு படித்தால்தான் வாழ்வில் முன்னேற முடியும். கடினமாக உழைத்து உங்களைப் படிக்க வைக்கும் பெற்றோரை நினைத்துப் பாருங்கள்.
ஐஐடி, பல்கலைக்கழகங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பம், கண்டு பிடிப்புகள் மூலம் சாதாரண மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வழிவகை களைக் கண்டறிய வேண்டும்.
இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.