

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, தமிழகத்தில் உரிமம் இல்லாமல் இயங்கும் குடிநீர் தயாரிப்பு ஆலைகளை மாவட்ட நிர்வாகங்கள் மூடி வரு கின்றன.
தமிழகத்தில் உரிமம் பெறாமல் இயங்கும் குடிநீர் தயாரிப்பு ஆலைகளை மூடும்படி பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை தலைமை பொறியாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றபோது, 132 நிறுவனங்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகங்கள் அறிக்கை தாக்கல் செய்தன. சில மாவட்ட நிர்வாகங்கள் அறிக்கை தாக்கல் செய்யாததைத் தொடர்ந்து, மார்ச் 3-ம் தேதிக்குள் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும், தங்கள் பகுதியில் அனுமதியின்றி நிலத்தடி நீரை எடுக்கும் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்தும் மின்மோட்டார்கள் மற்றும் ஆழ்துளை கிணறுகளை மூடி சீல் வைக்கும்படி உத்தரவிட்டது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக சென்றும், அதிகாரிகள் மூலமாகவும் ஆய்வு செய்து அந்த ஆலைகளை மூடி வருகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை, மாதவரம், மணலி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் அதிகஅளவில் ஆலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் தற்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை எந்த நிறுவனமும் மூடப்படவில்லை என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 90 ஆலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை உரிமம் இன்றி இயங்குவதாகக் கூறப்படுகிறது. பெரும்புதூர் வட்டத்தில் இயங்கும் 79 ஆலைகளில், குன்றத்தூர் பகுதியில் 3, பெரும்புதூர், உத்திரமேரூரில் தலா ஒன்று உட்பட மொத்தம் 9 ஆலைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 158 ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் தாம்பரத்தில் 4, செங்கல்பட்டு பகுதியில் 3 என 7 ஆலைகளை வருவாய்த் துறை அதிகாரிகள் மூடி சீல் வைத்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான குடிநீர் தயாரிப்பு ஆலைகளுக்கு விவசாயக் கிணறுகளில் இருந்து நீர் கொண்டு வரப்படுகிறது. இதுகுறித்தும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.