

மேட்டூர் உபரி நீரை பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையில், ரூ.565 கோடி மதிப்பிலான மேட்டூர் - சரபங்கா நீரேற்றத் திட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் காவிரி - சரபங்கா ஆறு, சரபங்கா ஆறு - திருமணிமுத்தாறு, திருமணிமுத்தாறு - வசிஷ்ட நதியில் மேட்டூர் காவிரி உபரி நீரை இணைத்தால் காவிரி நீர் கடலில் கலப்பதைத் தடுத்து, சேலம், நாமக்கல், அரியலூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும். மேலும் ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள், ஆறுகள், நதிகளில் காவிரி உபரி நீரை சேமிப்பதுடன் குடிநீர் பிரச்சினையும் தீர்க்கப்படும்.
இத்திட்டத்தின் முதல்கட்டமாக, சேலம் மாவட்டம் இருப்பாளி கிராமத்தில் உள்ள மேட்டுப்பட்டி ஏரி அருகில் மேட்டூர் - சரபங்கா நீரேற்றத் திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி, மார்ச் 4-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார். ரூ.565 கோடி மதிப்பிலான இத்திட்டம் மூலம், மேட்டூர் அணையின் மழைக்கால வெள்ள உபரி நீர், சரபங்கா வடிநில பகுதியில் வறட்சியான 100 ஏரிகள் மற்றும் குளங்களுக்கு மின்மோட்டார் மூலம் நீரேற்றம் செய்யப்படும்.
இதனால், ஓமலூர், மேட்டூர்,எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 வட்டங்களில் உள்ள விவசாயநிலங்கள் பயன்பெறும். நங்கவள்ளி, மேச்சேரி, தாரமங்கலம், ஓமலூர், கெங்கவல்லி, எடப்பாடி ஆகிய ஒன்றியங்களில் உள்ள விவசாய நிலங்களும் இத்திட்டத்தால் பயன்பெறும்.
இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்படுவதோடு இப்பகுதி மக்களின் குடிநீர் பற்றாக்குறையும் தீர்க்கப்படும் என்று பொதுப்பணித் துறை தரப்பில் கூறப்படுகிறது.