Published : 29 Feb 2020 09:09 PM
Last Updated : 29 Feb 2020 09:09 PM

எலியட்ஸ் பீச்சில் கடத்தப்பட்ட குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு : கடத்தல் கும்பல் பிடிபட்ட சுவாரஸ்ய நிகழ்வு: சிசிடிவி கேமராவின் சிறப்பான உதவி

பெசன்ட் நகர் கடற்கரையில் தாயுடன் உறங்கிய 8 மாத கைக்குழந்தையை கடத்திய கும்பல் ரூ.2.25 லட்சத்துக்கு விற்றது. குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்ட போலீஸார் அனைவரையும் கைது செய்தனர். ஆரம்பம் முதல் குழந்தையை வாங்கியவர் வீடுவரை 3 வது கண்ணான சிசிடிவி கேமரா உதவியால் சாதிக்க முடிந்தது.

காணாமல்போன குழந்தை பதறிய தாய்

கடந்த 28- ம் தேதி அதிகாலை சுமார் 4 மணிக்கு சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச் ஸ்கேட்டிங் மைதானத்தில் கும்பகோணத்தை சேர்ந்த பாட்சா(26) என்பவரின் மனைவி சினேகா (22) தனது எட்டு மாத பெண் கைக்குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது முன்பின் தெரியாத நபர்கள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு சென்று விட்டனர்.

உடனடி செயலில் இறங்கிய போலீஸார்

இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தாயார் சினேகா கொடுத்த புகாரின் பேரில் சாஸ்திரிநகர் போலீசார் குழந்தையை காணவில்லை என்று வழக்குப் பதிவு செய்தனர். குழந்தையை கண்டுபிடிக்க அடையார் உதவி ஆணையர் தலைமையில் 4 ஆய்வாளர்கள் கொண்ட நான்கு படைகள் அமைக்கப்பட்டு தனிப்படையினர் தீவிர விசாரணை மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

சிசிடிவி காட்சிப்பதிவில் 3 பெண்கள் ஒரு ஆண் சம்பவம் நடந்த இடத்திற்கு வருவதும், பின்னர் அங்குள்ள நடைமேடையில் அமர்வதும், அவர்களில் ஒரு பெண் அங்கே உறங்கிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடமிருந்து கைக்குழந்தையை தூக்கி வருவதும், பின்னர் அவர்கள் 4 பேரும் அங்கிருந்து ஆட்டோ பிடித்துச் செல்வதும் தெரிந்தது.

விடாமல் துரத்திய மூன்றாவது கண்

ஆட்டோ செல்லும் பாதையில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் சேகரித்து ஆய்வு செய்தனர் அது ஒவ்வொரு பகுதியாகச் சென்று படேல் சாலை வழியாக காந்தி மண்டபம், ராஜ்பவன் வழியாகச் சென்று சின்னமலையில் அவர்கள் குழந்தையுடன் இறங்குவது தெரிந்தது. அங்கு மோட்டார் சைக்கிளில் ஒரு நபர் நிற்பதும் அவருடன் பேசிய பின்னர் அங்கிருந்து இன்னொரு ஆட்டோவில் ஏறுவது தெரிந்தது.

பைக்கில் வந்த நபர் வழிகாட்ட அந்த ஆட்டோ அவர் பின்னால் செல்ல அவர்கள் செல்லும் பாதையை வழியெங்கும் உள்ள சிசிடிவி காட்சிப்பதிவுகளை வைத்து போலீஸார் ஆய்வு செய்துக்கொண்டேச் செல்ல அது சைதாப்பேட்டையின் உள்ளே புகுந்து நெசப்பாக்கம் வரை செல்வது தெரிந்தது.

குற்றவாளி வீடுவரை காட்டிக்கொடுத்த சிசிடிவி

அங்குள்ள வழிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது ஆட்டோ ஒரு முட்டுச் சந்திற்குள் செல்வது தெரிந்தது. இதற்குமேல் அவர்கள் செல்ல வழி இல்லை என போலீஸார் தெரிந்துக்கொண்டனர். பின்னர் பைக்கில் வந்தவர் புகைப்படத்தை சிசிடிவியிலிருந்து எடுத்த போலீசார் அங்குள்ளவர்களிடம் விசாரிக்க இவர் பெயர் மணிகண்டன் என்று வீட்டைக்காட்டியுள்ளனர். ஆனால் வீட்டில் யாரும் இல்லை.

சிறிது நேரம் கழித்து அங்கு வந்த மணிகண்டனை போலீஸார் மடக்கிப்பிடித்து விசாரிக்க முதலில் ஓஎல்எக்ஸ் மூலம் குழந்தை தத்து கொடுப்பவர்களிடம் வாங்கினேன் என்று மழுப்பியவர் பின்னர் கவனிப்பு நடந்தவுடன் உண்மையை ஒப்புக்கொண்டார்.

சிக்கிய குற்றவாளிகள்

குழந்தையைக் கடத்திய காரைக்குடியைச் சேர்ந்த மேரி (35) அவரது மகன் ரூபன் ( 19) சைதாப்பேட்டை அபித் காலனியில் வசிக்கும் திருப்பதி அம்மாள் (42) அவரது மகள் பாலவெங்கம்மாள் (18) ஆகியோரிடமிருந்து ரூ.2 லட்சம் கொடுத்து 8 மாத பெண் குழந்தையை வாங்கினேன் என்று கூறியுள்ளார்.

குழந்தை எங்கே என்று கேட்டபோது தனது சகோதரிக்காகத்தான் வாங்கினேன் அவரது வீட்டில் உள்ளது என்றுக் கூற அவர் வீட்டுக்கு மணி கண்டனை அழைத்துச் சென்ற போலீஸார் முதலில் குழந்தையை மீட்டனர். குழந்தை உடல் நிலை பரிசோதனைக்காக சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

பின்னர் மணிகண்டனுடன் சைதாப்பேட்டை வந்த போலீஸார் 4 பேரையும் கொத்தாக கைது செய்தனர். குழந்தையை விற்பனை செய்ததற்காக வாங்கிய பணம் 2 லட்ச ரூபாயில் 1.25 லட்சம் ரூபாயை மீட்டனர். பின்னர் அனைவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

நடந்தது என்ன?

போலீஸார் நடத்திய விசாரணையில் கும்பகோணத்தில் கணவருடன் வசித்த சினேகா தனது கணவர் பாட்சாவுடன் சண்டைப்போட்டுவிட்டு குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்னை வந்தவர் பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச்சில் உள்ளவர்களுடன் தங்கி வளையல், பாசிமணி, ஊசி விற்று வந்துள்ளார்.

குழந்தையை வாங்கி சிக்கிக்கொண்ட மணிகண்டனின் சகோதரி பாண்டியம்மாளுக்கு குழந்தை இல்லை. வாடகைத்தாய் மூலம் குழந்தைப்பெற்றுக்கொள்ள காரைக்குடி மேரியை தெரிந்தவர்மூலம் அணுக அவர் நான் இப்ப அதை செய்வதில்லை, ஆனால் எங்காவது குழந்தை தத்துகிடைத்தால் வாங்கித்தருகிறேன் என்று கூறியுள்ளார்.

தத்துக்கொடுக்க குழந்தை வேண்டும் என்பதால் சைதாப்பேட்டை திருப்பதி அம்மாளுடன் சேர்ந்து குழந்தையை எங்கிருந்தாவது ஏழைகளிடம் விலைக்கு வாங்கலாம் அல்லது திருடலாம் என சர்ச்சுகள், கோயில்கள் எனச் சுற்றியுள்ளார்.

தாயிடம் குழந்தையை விலைபேசிய பெண்

அப்போதுதான் எலியட்ஸ் பீச்சில் சினேகா கைகுழந்தையுடன் இருப்பதும் உடன் யாரும் இல்லாததும் தெரிந்துள்ளது. சினேகாவிடம் பேச்சுக்கொடுத்த மேரி குழந்தையை விலைக்கு கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துவிட்டார். இதையடுத்து சினேகாவிடமிருந்து குழந்தையை கடத்த முடிவு செய்துள்ளார் மேரி.காரணம் சினேகா போலீஸுக்கு போக மாட்டார், போனாலும் போலீஸார் புகாரை ஒழுங்காக விசாரிக்க மாட்டார்கள் என நினைத்துள்ளனர்.

ஒருவாரம் சினேகாவை கண்காணித்து அவர் எங்கு படுக்கிறார், உடன் யார் படுக்கிறார் என பார்த்து 28-ம் தேதி நால்வரும் குழந்தையை திட்டம்போட்டு திருடி மணிகண்டனிடம் விற்றுள்ளனர். மணிகண்டன் குழந்தைக் கடத்தப்பட்ட குழந்தை என்று தெரியும் ஆனாலும் தனது சகோதரிக்கு குழந்தை கிடைக்கும் என்பதால் ரூ.2 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்.

ஆனால் குழந்தை காணாமல்போனதும் போலீஸார் தீவிரமாக விசாரித்து சிசிடிவி கேமராமூலம் தன் வீட்டு வாசல்படிக்கே வருவார்கள் என மணிகண்டன் நினைத்திருக்க மாட்டார். குழந்தை தாய் சினேகாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தாய் சினேகாவுக்கு புத்திச்சொன்ன போலீஸார், அவரது கணவரை கும்பகோணத்திலிருந்து வரவழைத்திருந்தனர். கணவனுடன் சேர்ந்து வாழ புத்திச் சொல்லி அனுப்பி வைத்தனர்.

கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் ஐபிசி பிரிவு 363, 368, 379 -ன் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் வேறு குழந்தைகளை இதேப்போன்று கடத்தி விற்றுள்ளார்களா? என்றும் விசாரணை நடத்த உள்ளனர். மணிகண்டனின் சகோதரை பாண்டியம்மாள் இதில் அப்பாவி என்பதால் அவர்மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.

ஏழைக்கும் கிடைத்த நியாயம்

குழந்தை கடத்தப்பட்டு அது ஒரு ஏழைத்தாயின் குழந்தையாக இருந்தாலும் புகாரை விசாரணைக்கு எடுத்து 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து குழந்தையை மீட்ட போலீஸார் பாராட்டுக்குரியவர்கள். ஆனால் குழந்தை திருடப்பட்ட இடத்திலிருந்து அது கொண்டுச் செல்லப்பட்ட ஒவ்வொரு இடத்தையும் கண்காணித்து நெசப்பாக்கத்தில் உள்ள மணிகண்டன் வீட்டு வாசல்வரை கொண்டுச் சென்ற மூன்றாவது கண்ணான சிசிடிவி கேமாராவால் மட்டுமே இது சாத்தியமானது.

காவல் ஆணையரின் சிசிடிவி லட்சியம்

இவை அனைத்தும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எடுத்த முயற்சியின் விளைவாக சென்னையில் பொறுத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள், போலீஸாரின் விழிப்புணர்வு பிரச்சாரத்தால் வணிக நிறுவனங்கள், வீடுகள், கல்வி நிறுவனங்கள் என பல பகுதிகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களாலேயே சாத்தியமானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x