Published : 29 Feb 2020 07:15 PM
Last Updated : 29 Feb 2020 07:15 PM

மாதவரம் ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பொதுமக்களுக்கு கண் எரிச்சல்: மீட்புப் பணியில் டிஜிபி சைலேந்திரபாபு; காவல் ஆணையர் நேரில் ஆய்வு 

மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயன கிடங்கில் பற்றிய தீ பெரிய அளவில் கட்டுக்கடங்காமல் எரிகிறது. 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள பொதுமக்கள் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள மருந்துப்பொருட்கள் தயாரிக்கும் ரசாயன ஆலையில் மாலை 3.30 மணி அளவில் பற்றிய தீ நேரம் செல்லச் செல்ல கட்டுக்கடங்கா பெரு நெருப்பாக மாறி எரிந்து வருகிறது. ஆரம்பத்தில் 5 தீயணைப்பு வாகனங்கள் வந்தும் தீயை அணைக்க முடியவில்லை. ரசாயன பொருள் எரிவதால் தண்ணீர் ஊற்றி அணைக்க முடியவில்லை. அதே நேரம் நுரை கொண்டு அணைக்க முயன்றும் தீ அணையவில்லை.

கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாக கொழுந்துவிட்டு எரியும் தீ கட்டுக்கடங்கவில்லை. நேரம் செல்லச் செல்ல தீ மேலும் எரிவதால் வெளியாகும் கரும்புகை அப்பகுதி முழுதும் பரவியுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

பக்கத்திலுள்ள ஆவடி பகுதிகளுக்கும் புகை பரவியுள்ளது. பொதுமக்கள் சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீப்பிடித்த பகுதிக்கு வேடிக்கைப்பார்க்க பொதுமக்கள் வரவேண்டாம் என போலீஸார் வேண்டுகோள் வைத்துள்ளனர். போக்குவரத்தும் மாற்றி விடப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதியில் தீயணைப்புத்துறை டிஜிபி தனது உயர் அதிகாரிகளுடன் தானே நேரடியாக தீயை அணைத்து மீட்ப்புபணியில் ஈடுபட்டார். காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் ஆணையர் தினகரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

தீவிபத்து குறித்து தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“மருந்து தயாரிக்கும் கெமிக்கல் என்பதால் விஷத்தன்மை இல்லை. அக்கம் பக்கம் பொதுமக்கள் பயம் கொள்ளத்தேவை இல்லை. புகை காற்றில் பரவுவதால் ஏற்படும் பிரச்சினை குறித்து தகவல் எதுவுமில்லை. மருந்துப்பொருள் என்பதால் ஆபத்தில்லை என்றே நினைக்கிறேன். தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் அனைத்து அதிகாரிகளும் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து விதமான நுரைகளும் இந்த தீயணைப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மூன்றுப்பக்கமும் சூழ்ந்து அணைத்து வருகிறோம், ஒருபக்கம் மட்டும் செல்ல முடியவில்லை. அங்கும் வீரர்கள் சென்றுள்ளனர். மொத்தம் 26 தீயணைப்பு வாகனங்கள், 6 நுரை அடிக்கும் வாகனங்கள், மெட்ரோ தண்ணீர் லாரிகள், 500 தீயணைப்பு வீரர்கள் அதிகாரிகள் உள்ளனர், மேலும் 500 தீயணைப்பு அதிகாரிகள் வர உள்ளனர். ஓரிரு மணி நேரத்தில் அணைத்துவிடுவோம். தற்போது அனைத்துவிதமான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

தீயை அணைப்பதாலும், மருந்துப்பொருளின் தன்மையாலும் புகை அதிகமாக வருகிறது. பொதுமக்கள் அஞ்ச வேண்டாம். தீ பற்றி எரிந்த இடத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர். அக்கம் பக்கத்திலிருந்தவர்களும் அகற்றப்பட்டுவிட்டனர். காவல் ஆணையர் உயர் அதிகாரிகள் இங்கு நேரில் பார்வையிட்டு வருகின்றனர்”.

இவ்வாறு தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x