

கூட்டணி தர்மப்படி தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்பி பதவியை ஒதுக்கவேண்டும் என்று பிரேமலதா தெரிவித்திருந்த நிலையில் அதிமுக கைவிரித்துள்ளது. பாமகவுடன் மட்டுமே அப்படி ஒப்பந்தம் போடப்பட்டது தேமுதிகவுடன் அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவி காலியாகிறது. இதற்கான தேர்தல் வர உள்ள நிலையில் அதிமுக, திமுக தலா 3 எம்.பி.க்களை தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது. இதனால் கூட்டணிக் கட்சிகள் தங்களுக்கான எம்.பி. பதவியைப் பெற முயல்கின்றன. அதிமுக கூட்டணியில் கடந்தமுறை பாமகவின் அன்புமணி ராமதாஸுக்கு எம்.பி. பதவி அளிக்கப்பட்டது. திமுகவில் வைகோவுக்கு அளிக்கப்பட்டது.
இம்முறை திமுகவில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. அதிமுகவில் கூட்டணிக் கட்சிகளுக்கு எம்.பி. பதவி அளிக்கப்படுமா என்பது கேள்விக்குறி. இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் , “தேமுதிக கூட்டணி தர்மத்தை எப்போதும் கடைப்பிடிக்கின்ற கட்சி. முதல்வரும் கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிப்பார் என எதிர்பார்க்கிறோம். அதன் அடிப்படையில் ராஜ்ய சபா எம்.பி. பதவியை தேமுதிகவுக்குத் தருவார் என எதிர்பார்க்கிறோம். ஏற்கெனவே கூட்டணி அமைத்தபோது பேசியதுதான், பிறகு பார்ப்போம் என்று தெரிவித்தார்கள். அதனால் எதிர்பார்க்கிறோம்”.
என்று தெரிவித்திருந்தார். மறுநாள் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரேமலதா அதே கருத்தைச் சொல்லி முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம் என்று தெரிவித்திருந்தார். அதன்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுத்தீஷ் நேற்று சந்தித்தார்.
அடையாறில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது மாநிலங்களவை எம்பி பதவி குறித்து கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், “தேமுதிகவுக்கு எம்பி பதவி தருவதாக அதிமுக ஒப்பந்தம் ஏதும் செய்யவில்லை. பாமகவுக்கு மட்டுமே எம்பி பதவி தருவதாக அப்போது அதிமுக ஒப்பந்தம் செய்திருந்தது அதை கொடுத்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் தேமுதிகவுக்கு அதிமுக கைவிரித்துவிட்டது என்று தெரியவருகிறது.