Published : 29 Feb 2020 01:20 PM
Last Updated : 29 Feb 2020 01:20 PM

ரஜினியுடன்  காவல்துறை உயரதிகாரி திடீர் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்துடன் உளவுப்பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு திடீர் என சந்தித்து பேசினார். ரஜினி வீட்டுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து இந்த பேச்சு வார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் துக்ளக் விழாவில் கலந்துக்கொண்ட ரஜினி பெரியார் பேரணி, திமுக தலைவர் மற்றும் முரசொலி குறித்து பேசினார். அவர் பெரியார் குறித்து கூறிய சர்ச்சைக் கருத்துக்கு இந்து அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக்கழகம், திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்புத்தெரிவித்தன. திராவிடர் விடுதலைக்கழகம் ரஜினி வீடு முற்றுகைப்போராட்டம் நடத்தியது.

துக்ளக் ஆசிரியர் வீட்டில் அதிகாலையில் பெட்ரோல் பாம் வீசப்பட்டது. இதையொட்டி சிலரை போலீஸார் கைது செய்யப்பட்டனர். மேற்கண்ட நிகழ்வு, ரஜினி வீடு முற்றுகை, எதிர்ப்பு போன்ற காரணங்களால் அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. எஸ்.ஐ.தலைமையில் 5 பேர் கொண்ட போலீஸார் பாதுகாப்புக்கு இருந்தனர்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் ரஜினி அவர்களை வேண்டாம் என திருப்பி அனுப்பிவிட்டார். தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என ரஜினி தெரிவித்தாலும் அவர் முக்கிய பிரமுகர் என்பதாலும், வேறு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் வீண் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என சென்னை காவல்துறை முடிவெடுத்தது.

இதையடுத்து சென்னை காவல் துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு நடிகர் ரஜினி்காந்தை சந்திக்க அவரது போயஸ் இல்லத்துக்கு இன்று காலை சென்றார். அவரது இல்லத்தில் ரஜினியை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பேசிய ரஜனிகாந்த் வீட்டிற்கு வழங்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற்றுக் கொள்ளும்படி கேட்டுள்ளார்.

ஏற்கெனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லம் அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதியில் இரண்டு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முதல்வரின் மறைவிற்குப் பிறகு வேதா இல்லம் நோக்கி செல்லும் பாதையில் மட்டும் தற்போது போலீஸ் பாதுகாப்பு இருப்பதால் தனக்கு தனியாக எதற்கு பாதுகாப்பு என அதெல்லாம் வேண்டாம், அடுத்தவர்களுக்கும் தொல்லை என்று ரஜினிகாந்த் கேட்டுகொண்டதாக கூறப்படுகிறது.

அவரிடம் ‘‘ரஜினியின் பாதுகாப்பு மட்டுமல்ல வேறு ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் தடுப்பதும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தடுப்பதும் காவல்பணி ஆகவே நீங்கள் இதை ஆடம்பரமான ஒன்றாக பார்க்கவேண்டாம் ’’என்றுக் கூறியதன்பேரில் 2 போலீஸாரை மட்டும் பாதுகாப்புக்கு இருக்க ரஜினி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x