

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து போலீஸ் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக புதுக்கோட்டையில் பாஜகவை சேர்ந்த 700 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து தமிழகம் முழுவதும் நேற்று பாஜக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தப்பட்டது. அதில், புதுக்கோட்டையில் கட்சியின் மாநில துணைத் தலைவர் நாகராஜன் தலைமையில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அண்ணாசிலை வழியாக ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஏராளமானோர் பேரணியாக சென்றனர்.
அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்தும், இதை எதிர்க்கும் கட்சிகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். இடையில் மாவட்ட சிறை அருகே பேரணி சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்திக் கலைந்துபோகச் செய்தனர்.
இந்நிலையில், போலீஸார் அனுமதியின்றி பேரணியில் ஈடுபட்டதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும் 700 பேர் மீது புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தினர் இன்று (பிப்.29) வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பாஜகவினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.