சமூகப்பணியில் ஈடுபட்ட தம்பதியர் தற்கொலை: மகனை இழந்த சோகத்தில் விபரீத முடிவு
கரூரில் மகனை இழந்த சோகத்தில் இருந்த தம்பதியினர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் நகராட்சி சணப்பிரட்டி எழில் நகரை சேர்ந்தவர் சேகர் (66). இவர், ஓய்வுபெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர். இவர் மனைவி கிருஷ்ணவேணி. இத்தம்பதியினரின் மகன் பாலகிருஷ்ணன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார்.
இதனால் சோகத்தில் இருந்த தம்பதி அப்பகுதியில் மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்கும் சமூகப் பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும், கோயில் ஒன்றும் கட்டியுள்ளனர்.
இந்நிலையில், கரூர் காந்தி கிராமம் அருகே இன்று (பிப்.29) அதிகாலை ரயிலில் அடிப்பட்ட நிலையில் சேகர் - கிருஷ்ணவேணி தம்பதி சடலமாக கிடந்துள்ளனர். கரூர் - திண்டுக்கல் ரயில் வழித்தடத்தில் எழில் நகர் அருகே தாங்கள் கட்டிய கோயிலின் பின்பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இதுகுறித்துத் தகவலறிந்த பசுபதி பாளையம் போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகன் தற்கொலையால் விரக்தியில் இருந்த தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து கரூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக அக்கறையுடன் மரக்கன்றுகள் நட்டுப் பராமரித்து வந்த தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
