

டெல்லி கலவரத்தை ஒடுக்க தமிழக காவல் படையை அனுப்ப வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வந்த போராட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக கடந்த 4 நாட்களாக டெல்லியில் மூண்டெழுந்த கலவரத்தில் 35-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கலவரம் நடைபெற்றபோது காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்த்தது என்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.
1947-ல் இந்தியா பிரிக்கப்பட்டபோது டெல்லியில் பெரும் மதக்கலவரம் மூண்டது. காவல் துறைக்குள்ளேயே மதமோதல் இருந்ததால் கலவரம் அதிகரித்ததே தவிர அடங்கவில்லை. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த வல்லப பாய் பட்டேல் உடனடியாக சென்னை காவல்துறை ஆணையாளராக இருந்த சஞ்சீவியை பணியில் அமர்த்தினார்.
இரண்டே நாட்களில் டெல்லி கலவரம் ஒடுக்கப்பட்டு மக்களுக்குப் பாதுகாப்புக் கிடைத்தது. பல மாதங்கள் தொடர்ந்து தமிழ் நாட்டுக் காவல்படையினர் டெல்லியில் அமைதியை நிலைநிறுத்தினர் என்பது வரலாறாகும். அதுபோல இப்போதும் மதவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட தமிழக காவல்படையை டெல்லிக்கு அனுப்பிக் கலவரத்தை ஒடுக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பழ.நெடுமாறன் கேட்டுகொண்டுள்ளார்.