Published : 29 Feb 2020 07:42 AM
Last Updated : 29 Feb 2020 07:42 AM

100 கால்நடை மருந்தகங்களுக்கு ரூ.43 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள்: தமிழக அரசு நிர்வாக ஒப்புதல்

சென்னை

தமிழகத்தில் 100 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 2 நோய் புலனாய்வு பிரிவுகளுக்கு ரூ.43 கோடியே 30 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஜூலை 9-ம் தேதி 110-விதியின்கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், ‘சிறந்த கால்நடை மருத்துவ சேவையை வழங்க அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டமைப்பு அவசியமாகும். அந்தவகையில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட 100 கால்நடை மருந்தகங்களுக்கு அறைகலன்களுடன் கூடிய புதிய கட்டிடங்கள் ரூ.37 கோடியில் நடப்பாண்டில் கட்டித்தரப்படும்’ என்று தெரிவித்திருந்தார்.

அதற்கு முன்னதாக, கால்நடை பராமரப்புத் துறை மானிய கோரிக்கை முடிவில் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில்,‘கால்நடை நோய் கண்காணிப்பு நோய் முன்னறிவிப்பு மற்றும் நோய்க்கிளர்ச்சி நேரங்களில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நாமக்கல் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவுகளுக்கு ரூ.2 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்’ என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர், 100 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 2 கால்நடை நோய் புலானய்வு பிரிவு ஆகியவற்றுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட ரூ.43 கோடியே 30 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அளித்தார். அதில், சாதாரண நிலப்பரப்பு, மலைப்பகுதி, கடலோரப்பகுதிகளில் அமைக்கப்படும் இந்த மருந்தகங்கள், புலனாய்வு பிரிவுக்கான கட்டிடங்களுக்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதையும் தெளிவுபடுத்தியதுடன், நபார்டு நிதியுதவி திட்டத்தில் நிதி ஒதுக்கவும் கோரியிருந்தார்.

இதை பரிசீலித்த தமிழக அரசு, 26 மாவட்டங்களில் 100 கால்நடை மருந்தகங்கள் மற்றும் நாமக்கல், திருவாரூரில் புதிதாக அமைக்கப்பட்ட 2 நோய் புலனாய்வு பிரிவுக்கான கட்டிடம் ஆகியவற்றை நபார்டு நிதித்திட்டத்தில் ரூ.43 கோடியே 30 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கட்டிட நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான அரசாணையை கால்நடை பராமரிப்புத்துறை செயலர் கே.கோபால் வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x