Published : 29 Feb 2020 07:39 AM
Last Updated : 29 Feb 2020 07:39 AM

அடுத்தடுத்த நாளில் 2 எம்எல்ஏக்கள் மரணம்: பேரவையில் திமுக பலம் 98 ஆக குறைந்தது - 15-வது சட்டப்பேரவையில் இதுவரை 8 எம்எல்ஏக்கள் மறைவு

அடுத்தடுத்த நாளில் 2 எம்எல்ஏக்கள் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் திமுகவின் பலம் 98 ஆக குறைந்துள்ளது.

கடந்த 2016-ல் நடந்த 15-வது சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று தொடர்ந்து 2-வது முறையாக அதிமுக ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா முதல்வரானார். அன்று முதல் இதுவரை 15-வது சட்டப்பேரவையில் 8 எம்எல்ஏக்கள் மரணம் அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற எஸ்.எம்.சீனிவேல், எம்எல்ஏவாக பதவியேற்பதற்கு முன்பே காலமானார். அதைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா (ஆர்.கே.நகர்), ஏ.கே.போஸ் (திருப்பரங்குன்றம்), ஆர்.கனகராஜ் (சூலூர்) ஆகிய 4 அதிமுக எம்எல்ஏக்கள் மரணம் அடைந்தனர்.

திமுக தலைவராக இருந்த கருணாநிதி (திருவாரூர்), கே.ராதாமணி (விக்கிரவாண்டி), கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்), எஸ்.காத்தவராயன் (குடியாத்தம்) ஆகிய 4 எம்எல்ஏக்கள் மரணம்அடைந்துள்ளனர். இதில், கே.பி.பி.சாமி நேற்று முன்தினமும், காத்தவராயன் நேற்றும் அடுத்தடுத்த நாளில் உயிரிழந்தனர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏக்களின் தொகுதிகள், மரணம் அடைந்த எம்எல்ஏக்களின் தொகுதிகளில் என இதுவரை 25 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்துள்ளது. இதில் திருப்பரங்குன்றம் தொகுதியில் 2 முறை இடைத்தேர்தல் நடந்துள்ளது.

அடுத்தடுத்த நாளில் 2 எம்எல்ஏக்களின் மறைவால் சட்டப்பேரவையில் திமுகவின் பலம் 98 ஆக குறைந்துள்ளது. தற்போதைய நிலையில் சட்டப்பேரவையில் கட்சிகளின் பலம்:

பேரவைத் தலைவர் உள்பட அதிமுக - 125, திமுக - 98, காங்கிரஸ் - 7, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1, சுயேச்சை (டிடிவி தினகரன்) - 1 என 232 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இடைத்தேர்தலுக்கு வாய்ப்பில்லை

15-வது சட்டப்பேரவையின் ஆயுட்காலம் ஓராண்டுக்கு மேலாக இருப்பதால் தற்போது காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளுக்கு சட்டப்படி இடைத்தேர்தல் நடத்தலாம். ஆனால், 2021 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடக்க இருப்பதால் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு மிகக் குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x