Published : 29 Feb 2020 07:26 AM
Last Updated : 29 Feb 2020 07:26 AM

17,500 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி உயரும்; தமிழகத்தில் கோடை காலத்தில் மின்வெட்டு வராது- மின் துறை அமைச்சர் தங்கமணி உறுதி

தமிழகத்தில் வரும் கோடையில் மின்வெட்டு ஏற்படுவதற்கான வாய்ப்பே கிடையாது என மின்துறை அமைச்சர் தங்கமணி உறுதியாக தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்திமின்னுற்பத்தியின் முக்கியத்து வத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு மின்கட்டமைப்புக் கழகம் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை மையங்களை 7 மாநிலங்களில் அமைத்துள்ளது.

இதன்படி, தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை மையம், மாநில மின்பகுப்பு மையம்மத்திய அரசின் நிதியுதவியுடன் ரூ.49 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மின்துறை அமைச்சர் தங்கமணி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த மையம் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் காற்றாலை, சூரியசக்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தைக் கணக்கிட்டு அதற்கேற்ற வகையில், அனல்மின் நிலையங்களில் உற்பத்தி மேற்கொள்ள முடியும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 37,608 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கிடைக்கிறது. இதில், தமிழகத்தின் பங்களிப்பு 43 சதவீதம் உள்ளது.

கமுதியில் அமைகிறது

நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகளவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. சூரியசக்தி மூலம் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடலாடியில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் சில பிரச்சினைகள் உள்ளதால் கமுதியில் அமைக்கப்படும். இதுதொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தி தவறானது.

தமிழகத்தின் தற்போதைய மின்தேவை தற்போதை 15 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு உள்ளது. வரும் கோடையில் 17,500 மெகாவாட் அளவுக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தஅளவுக்கு மின்னுற்பத்தி மேற்கொள்ளப்படும். எனவே, தமிழகத்தில் கோடைக்காலத்தில் மின்வெட்டு பிரச்சினை வருவதற்கு சாத்தியமே கிடையாது.

நுகர்வோருக்கு தற்போது வழங்கப்படும் 100 யூனிட் இலவசமின்சாரம் ரத்து என்றபேச்சுக்கும் இடமில்லை. தமிழகத்தில் சில அனல்மின் நிலையங்களை வரும் 2022-ம் ஆண்டுக்குள் மூடிவிடுமாறு மத்திய மின்சார ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உண்மையில், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத வகையில், அந்த அனல்மின் நிலையங்களில் சில உபகரணங்களை வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அந்த உபகரணங்கள் அமைக்கப்பட்டு அந்த மின்நிலையங்கள் தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கேங்மேன் பணிக்கு எழுத்துத் தேர்வு இன்னும் 20 நாட்களுக்குள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x