Published : 29 Feb 2020 06:43 AM
Last Updated : 29 Feb 2020 06:43 AM

கஜா புயல் பாதித்த ஓராண்டுக்கு பிறகு டெல்டா மாவட்ட சரணாலயங்களில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்

டெல்டா மாவட்டங்களில் உள்ள பறவைகள் சரணாலயங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நேற்று தொடங்கியது.

கஜா புயல் பாதித்த ஓராண்டுக்குப் பிறகு நடைபெறும் இந்த கணக்கெடுப்பின் மூலம் வலசை பறவைகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தெரியவரும் என்பதால் இந்த கணக்கெடுப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர், முத்துப்பேட்டை மற்றும் உதயமார்த்தாண்டபுரம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோடியக்கரை ஆகிய இடங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

வனத்துறை மற்றும் திருச்சிபல்லுயிரி பாதுகாப்பு அறக்கட்டளை (Bio-Diversity Conservation Foundation) இணைந்து இந்த பணியை மேற்கொண்டுள்ளன. இந்த பணியில் வனத் துறையினர், பறவைகள் ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர் கோட்ட வனப் பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் தலைமையில், திருவாரூர் மாவட்ட வன அலுவலர் கே.அறிவொளி கணக்கெடுப்புப் பணியை நேற்று தொடங்கி வைத்தார்.

பல்லுயிரி பாதுகாப்பு அறக்கட்டளையின் விஞ்ஞானி முனைவர் ஏ.குமரகுரு, பறவைகள் கணக்கெடுப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மற்றும் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்துதன்னார்வலர்களுக்கு பயிற்சியளித்த அவர், கணக்கெடுப்புப் பணி ஒருங்கிணைப்பை மேற்கொள்கிறார். இதுகுறித்து ஏ.குமரகுரு, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பறவைகள் தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து உணவு, குளிர் அல்லது வெப்பம் மற்றும் இனவிருத்தி ஆகியவற்றுக்காக பல்வேறு இடங்களுக்கு வலசை செல்கின்றன.

அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர், உதயமார்த்தாண்டபுரம், முத்துப்பேட்டை மற்றும் நாகை மாவட்டத்தில் உள்ள கோடியக்கரை ஆகிய பறவைகள் சரணாலயங்களுக்கு ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா, சைபீரியா, மங்கோலியா, தென் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பறவைகள் வலசை வருகின்றன.

ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பின் மூலம் வலசை வரும் பறவைகளின் வகைகள், எந்தெந்த நாடுகள் மற்றும் பகுதிகளிலிருந்து வருகின்றன என்பதை அறிந்துகொள்ள முடியும்.

கடந்த ஆண்டு கஜா புயல் வீசியதில் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் மற்றும் மரங்கள் உள்ளிட்டவைகள் மட்டுமின்றி இயற்கை வளங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

கஜா புயல் வீசியவுடன் கடந்தஆண்டு பிப்.7, 8 ஆகிய நாட்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதையடுத்து, ஓராண்டுக்குப் பிறகு தற்போது நடைபெறும் இந்த பறவைகள் கணக்கெடுப்பின் நிறைவில்தான் பறவைகளின் வரத்தில் ஏதேனும் மாற்றம்(எண்ணிக்கை குறைவு) உள்ளதா என்பது தெரியவரும். அவ்வாறு மாற்றம் ஏற்பட்டிருந்தால், அதை சரிசெய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை வனத் துறை திட்டமிடும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x