Published : 28 Feb 2020 07:55 PM
Last Updated : 28 Feb 2020 07:55 PM

மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றி அமைக்க புதிய திட்டம்: நிதின் கட்கரி

புதுச்சேரி

மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றி அமைக்கும் இடங்களில் புதிய திட்டத்தை வகுக்க உள்ளோம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் மற்றும் அதனையொட்டிய தமிழகப் பகுதிகளில் மத்திய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்தும் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் இன்று மாலை ஆய்வுக் கூட்டம் நடந்தது.

ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், "புதுச்சேரியில் நகரப்பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநில சாலைகள் மற்றும் தேசிய சாலைகளைப் பிரிக்கும் பணி நடைபெறுகின்றது. இப்பணிகள் முடிவடைந்த பின்பு புதுச்சேரியில் புதிய மேம்பாலங்கள் அமைப்பது தொடர்பான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். ஏற்கெனவே ஒப்புதல் தந்த திட்டங்கள் நிறைவுக்குப் பிறகு புதிய திட்டங்கள் பரிசீலிப்போம். மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்க வேண்டும் என்ற முதல்வரின் கோரிக்கையைப் பரிசீலிக்க சில காலங்கள் தேவை. சாலை மாற்றி அமைக்கும் இடங்களில் புதிய திட்டத்தை வகுக்க உள்ளோம்" என்று தெரிவித்தார்.

முதல்வர் நாராயணசாமி கூறுகையில், "புதுச்சேரியில் தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துதல், அகலப்படுத்துதல், புதிய சாலைகள் அமைப்பது தொடர்பாக தெரிவித்தோம். குறிப்பாக புதுச்சேரி முதல் மகாபலிபுரம், விழுப்புரம் முதல் நாகப்பட்டினம், புதுச்சேரியினுள் முருங்கப்பாக்கம் முதல் சிவாஜி சிலை, மதகடிப்பட்டு முதல் புதுச்சேரி வரையிலும் நான்கு வழிச்சாலை அமைப்பது தொடர்பான 4 திட்டங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் அளித்துள்ளோம். 90% அதனைச் செய்து தர மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது'' என்று குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து அன்னை ஆசிரமம் சென்று வழிபட்டார். அங்கு பாஜகவினரும் செல்ல முற்பட்டனர். ஆனால், தடுத்து நிறுத்தப்பட்டதால் வாக்குவாதத்தல் ஈடுபட்டனர். பின்னர் ராஜ்நிவாஸ் சென்று நிதின் கட்கரி புறப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x