

சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய கலாச்சார பாரம்பரியம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அவற்றை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் குறிப்பிட்டார்.
இந்தியா -தென்கிழக்கு ஆசிய நாடுகளுகளுக்கு இடையிலான கடல் சார்ந்த பழைய சகோதரத்துவத்தை நினைவூட்டும் சர்வதேச கருத்தரங்கில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் இன்று பங்கேற்றார்.
அப்போது அவர் பேசும்போது, ''இந்திய கலாச்சாரம் உலகின் பிற பகுதிகளை எட்டியபோதும் அங்கு ஆளும் அமைப்பை ஒருபோதும் சவால் செய்ததில்லை. மாறாக ஆட்சியாளர்களின் மனதை மாற்றவே முயற்சித்தது. இந்திய கலாச்சாரம் ஒருபோதும் புள்ளியியல் எல்லைகளை விரிவுபடுத்துவதையும் மற்றவர்களைக் குடியேற்றுவதையும் நம்பவில்லை. இந்தியாவின் மிகப்பெரிய அறிவைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டது. இந்தியா எப்போதும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விவாதம் மற்றும் கலந்துரையாடலுக்கு முக்கியத்துவம் அளித்தது.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய கலாச்சார பாரம்பரியம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அவற்றை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது'' என்று பிரகலாத் சிங் படேல் குறிப்பிட்டார்.
ஹரியாணாவில் உள்ள ராகிகாரியின் பண்டைய இடத்தைப் பற்றி பேசிய அமைச்சர், ''இது நாட்டின் வரலாறு மற்றும் நாகரிகத்தின் மிக முக்கியமான சான்றாக வெளிவந்துள்ளது, இது இந்திய நாகரிகம் பெரியது என்பதைக் குறிக்கிறது'' என்று தெரிவித்தார்.
முன்னதாக, புதுச்சேரியில் நடைபெறும் சுற்றுலாத் திட்டங்கள் தொடர்பாக சுற்றுலாத்துறை செயலர் பூர்வா கார்க், கலை பண்பாட்டுத்துறை செயலர் திவேஷ் சிங் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.