

குன்னூர் அருகே நெடுகல்கொம்பை பழங்குடியினரை மூளைச்சலவை செய்ததாக கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் ஆதரவாளர் டெனிஷுக்கு உதகை நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் டெனிஷ் என்கிற கிருஷ்ணன்(31). இவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாவோயிஸ்ட் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். கேரளாவில் இவரைக் கைது செய்த காவல்துறை, திருச்சூர் சிறையில் அடைத்தது.
விசாரணையில், நீலகிரி மாவட்டம் கொலக்கொம்பை அருகே உள்ள நெடுகல்கொம்பை ஆதிவாசி கிராமத்துக்கு 2016-ல் ஊடுருவியதில் இவருக்குத் தொடர்பு உண்டு என காவல்துறை உறுதிப்படுத்தியது. பழங்குடியினர் இடையே துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து, அவர்களை மூளைச் சலவை செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கில் நீலகிரி மாவட்டம் கொலக்கொம்பை போலீஸார் டெனிஷை கைது செய்தனர்.
இந்த வழக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் மாவோயிஸ்ட் ஆதரவாளர் டெனிஷுக்கு மாவட்ட நீதிபதி பி.வடமலை இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
டெனிஷ் வழக்கறிஞர் விஜயன் கூறுகையில், ''டெனிஷ் கைது செய்யப்பட்டு, 100 நாட்களுக்கு மேலாகியும் கொலக்கொம்பை போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதனால், டெனிஷுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தோம். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.வடமலை டெனிஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். ஜாமீன் வழங்கினால், டெனிஷ் தலைமறைவாகி விடுவார் என ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு வழக்கறிஞர் பால நந்தகுமார் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால், நீதிபதி வடமலை, டெனிஷுக்கு ரத்த சம்பந்தப்பட்ட ஒருவர் உள்ளிட்ட இருவர் உத்தரவாதம் அளிக்க வேண்டும், ரூ.25 ஆயிரம் பிணைத் தொகை செலுத்த வேண்டும். மேலும், டெனிஷ் தினமும் காலை 10 மணி மற்றும் மாலை 5 மணிக்கு கொலக்கொம்பை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளோடு ஜாமீன் வழங்கினார்'' என்றார்.
மாவோயிஸ்ட் ஆதரவாளர், டெனிஷ், நிபந்தனை ஜாமீன், மாவோயிஸ்ட், நெடுகல்கொம்பை, ஆதிவாசி கிராமம், மாவோயிஸ்ட் ஊடுருவல், டெனிஷ் கைது, நீதிபதி வடமலை, டெனிஷ் வழக்கறிஞர், விஜயன், அரசு வழக்கறிஞர்