

கரூர் அமராவதி பழைய பாலத்தை மூட தடை கோரிய வழக்கில் கரூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரைச் சேர்ந்த குணசேகரன், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
கரூர் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கரூர் - திருமாநிலையூர் உயர்மட்ட பாலம் கடந்த 50 ஆண்டுகளாக பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்தது.
இப்பாலம் கரூர் நகரத்தையும் திருச்சி மற்றும் திண்டுக்கல் நெடுஞ்சாலைகளையும் இணைக்கிறது.
போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால் கடந்த 2001-ல் இந்தப்பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டது. பின்னர் கரூர்- திருமாநிலையூர் பாலம் இருசக்கர வாகனங்கள் மற்றும் மாட்டுவண்டிகள் செல்லும் பாதையாக மாற்றப்பட்டது.
கடந்த 18 ஆண்டுகளாக ஒருவழிப்பாதையாக பயன்பட்டு வந்த பழைய பாலத்தை தற்போது மூடிவிட்டனர். அதில் பூங்கா அமைக்க கரூர் நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே கரூர் - திருமாநிலையூர் பழைய பாலத்தை போக்குவரத்துக்கு திறக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவீந்திரன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.சந்தானகிருஷ்ணன் வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரூர் மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.