Published : 28 Feb 2020 04:12 PM
Last Updated : 28 Feb 2020 04:12 PM

பேரிடர் தவிர்ப்பு: முன்னோடி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு; தமிழக வருவாய் ஆணையர் தகவல்

பேரிடர் தவிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முன்னோடி திட்டங்களுக்கு நிதி தமிழக வருவாய் ஆணையர் ஜே.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இந்திய மண் வளப் பாதுகாப்பு சங்கம், இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவனம் சார்பில் 'மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவைக் கட்டுப்படுத்தும் உத்திகள்' தொடர்பான இரு நாள் தேசியக் கருத்தரங்கம் உதகையில் இன்று (பிப்.28) உதகையில் தொடங்கியது.

தமிழ்நாடு மாநில மண் வளப் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் எஸ்.மணிவண்ணன் வரவேற்று, கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கினார். கருத்தரங்குக்கு இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.

கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பேசும்போது, "கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக 77 பெரிய நிலச்சரிவுகளும், 20 சிறிய நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. அம்மாதம் 7-ம் தேதி 820 மி.மீ., மற்றும் 8-ம் தேதி 911 மி.மீ. மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் 5 பேரும், இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஏற்படும் நிலச்சரிவுகளுக்கு விவசாய முறைகளில் மாற்றம் மற்றும் வளங்களின் முறையற்ற பயன்பாடே காரணமாகும்.

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளாக கண்டறியப்பட்ட பகுதிகள் 101-ல் இருந்து 283 ஆக உயர்ந்துள்ளது. இதனால், பசுமை பகுதிகள் மற்றும் கட்டுமானங்கள் இல்லாத பகுதிகளை வரையறுக்க வேண்டும். மேலும், கட்டுமானப் பகுதிகளை முறைப்படுத்த வேண்டும்.

நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் தனித்தன்மை வாய்ந்ததால் இதை பாதுகாக்க வேண்டும்" என்றார்.

இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் துணை இயக்குநர் அமித்வா குந்து பேசுகையில், "இந்திய புவியியல் ஆய்வு மையம் சார்பில் 1980-ம் ஆண்டு முதல் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை வரையறுத்து வருகிறோம். 41 அம்சங்களை கொண்டு ஆய்வு செய்து 14 ஆயிரம் நிலச்சரிவு பகுதிகளை கண்டறிந்து, அது குறித்து தகவல்களை எங்களின் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளோம்.

கடந்தாண்டு தமிழகத்தில் 206, கேரளாவில் 1,595 மற்றும் கர்நாடகாவில் 84 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் மற்றும் டார்ஜிலிங் பகுதிகளில் முன்னறிவிப்பு உபகரணங்களை அமைத்துள்ளோம். எங்களின் இளையதளத்தில் உள்ள தகவல்களை அனைத்து துறைகளுடனும் பகிர்ந்துகொள்கிறோம்" என்றார்.

கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வருவாய் ஆணையர் ஜே.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள 'நீட்' செயலியை அறிமுகப்படுத்தி பேசும்போது, "இந்தியாவில் 15 சதவீத பகுதிகளில் நிலச்சரிவு அபாயமுள்ளவை. இமாலயா, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானல், தேனி ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் உள்ளது.

பேரிடர் ஏற்பட்டதும் அரசு துரிதமாக செயல்படுகிறது. ஆனால், பேரிடர் ஏற்படுவதை முன்னரே கணிக்க விஞ்ஞானிகளின் அறிவாற்றல் தேவை. பேரிடர்களை தவிர்க்க உள்ளூர் மக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

தேசிய பேரிடர் நிதியில் உள்ள தமிழக பங்கிலிருந்து பேரிடரை தவிர்க்க செயல்படுத்தப்படும் முன்னோடி திட்டங்களுக்கு நீலகிரி மாவட்டத்துக்கு ரூ.1.25 கோடி நிதி ஒதுக்கப்படும்.

பேரிடர்களை சதுப்புநிலக்காடுகள், மணல் மேடுகள் ஆகியவை தடுக்கின்றன. இவற்றை பாதுகாக்க வேண்டும். பல நேரங்களில் மனித தவறால் பேரிடர் ஏற்படுகிறது. இயற்கையை அழிப்பதால் பேரிடர் ஏற்படுகிறது. அந்தந்த பகுதியின் சுற்றுச்சூழல் ஏற்ப திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். பேரிடர் அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாற்றிடம் வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்படும்" என்றார்.

கருத்தரங்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x