

குரூப்-1 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக சிபிஐ, தமிழக அரசு உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்துள்ளது.
குரூப்-1 தேர்வு முறைகேடு தொடர்பாக திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், "கடந்த 2016-ம் ஆண்டு நடந்த குரூப்-1 தேர்வில் மனிதநேய அறக்கட்டளை மற்றும் அப்பல்லோ பயிற்சி மையத்தில் இருந்து அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மையங்கள் ஆளுங்கட்சியில் செல்வாக்கு மிக்கவர்களால் நடத்தப்படுவதால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினால்தான் உண்மை வெளியே வரும்" எனக் கோரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணை இன்று (பிப்.28) நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.
அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், "குரூப்-1 தேர்வில் மிகப்பெரிய அளவில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளின் உதவியுடன் விடைத்தாள்களைத் திருத்தியதில் மோசடி நடைபெற்றுள்ளது. உயரதிகாரிகள் முதல் கீழ்மட்ட பணியாளர்கள் வரை அனைவருக்கும் இதில் தொடர்புள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவராக பதவி வகித்தவருக்கும் இதில் தொடர்புள்ளது. இந்த வழக்கை உள்ளூர் போலீஸார் விசாரித்தால் உண்மை வெளியே வராது என்பதால்தான் சிபிஐ விசாரணை கோருகிறோம்" என்றார்.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், "இந்த வழக்குத் தொடர்பாக புலன் விசாரணை முடிவடைந்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, 6 விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விரைவில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது" என்றார்.
டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், "இது ஏற்கெனவே முடிந்துவிட்ட பிரச்சினை. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது" என்றார்.
சம்பந்தப்பட்ட பயிற்சி மையங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "ஒரே பயிற்சி மையத்தில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் எந்த முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என ஏற்கெனவே தெரிவித்துள்ளோம்" என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், "இது தொடர்பாக சிபிஐ மற்றும் தமிழக அரசு, சம்பந்தப்பட்ட போலீஸார் உள்ளிட்டோர் வரும் ஏப்.6-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தனர்.