

ராமநாதபுரம் போகலூர் டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கத் தடை கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் வழக்கறிஞர் ஐ.முகமதுரஸ்வி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி 2015-ல் தொடங்கியது.
மதுரையிலிருந்து பரமக்குடி வரை 76 கிலோ மீட்டர் தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.
பரமக்குடியிலிருந்து ராமேஸ்வரம் வரை 99 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி இன்னும் தொடங்கவில்லை.
பரமக்குடி- ராமநாதபுரம் சாலை 18 கிலோமீட்டர் தூரத்திற்கு தரமற்ற நிலையில் உள்ளது. இரு வழிச்சாலையில் தான் வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில் போகலூரில் திடீரென டோல்கேட் அமைக்கப்பட்டு கட்டணம் வசூல் தொடங்கியுள்ளது. நான்கு வழிச்சாலை பணி முடிவடையாத நிலையில் டோல்கேட் அமைத்தது தேசிய நெடுஞ்சாலை சட்டம், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது.
இந்த டோல்கேட்டில் ஆம்புலன்ஸ் செல்ல வசதியில்லை. அடிப்படை வசதிகளும் இல்லை. அவசர வாகனங்கள் செல்ல தனி வழியும் இல்லை. எனவே போகலூர் டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்க தடை விதித்து, டோல்கேட்டை மூட உத்தரவிட வேண்டும்"
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி. ரவீந்திரன் அமர்வு இன்று விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.நீலமேகம் வாதிட்டார்.
மனு தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.