Last Updated : 28 Feb, 2020 02:15 PM

 

Published : 28 Feb 2020 02:15 PM
Last Updated : 28 Feb 2020 02:15 PM

கள் இறக்க, விற்க அனுமதி கேட்டு வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளை நோட்டீஸ்

மதுரை

தமிழகத்தில் கள் இறக்க விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கி, கள் இறக்கவும், விற்கவும் அனுமதி வழங்கக்கோரி தாக்கலான மனுவுக்கு உள்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி சிலோன் காலனியைச் சேர்ந்த ஆர்.ஆறுமுகம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் மதுவிலக்கு சட்டம் 1937-ல் கள் இறக்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையால் பனை மரம் வளர்ப்போர் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். கள்ளுக்கான தடையை விலக்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில் கள்ளில் போதைக்காக பல வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. கள் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கள் போதைப்பொருள் அல்ல. உடலுக்கு நல்லது. வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனையை பெருக்குவதற்காகவே கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மதுபானங்களை விட கள்ளில் குறைவாகவே போதை உள்ளது.

எனவே மதுவிலக்கு சட்டத்தில் கள் இறக்கவும், விற்கவும் தடை விதிப்பட்டிருப்பதை நீக்கி, கள் இறக்கவும், விற்கவும் அனுமதி வழங்கவும், தனிப்பயன்பாடு மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்காக பனை மரங்களில் இருந்து கள் இறக்கவும், விற்கவும் அனுமதி வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவீந்திரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் லஜபதிராய் வாதிட்டார்.

பின்னர் மனு தொடர்பாக தமிழக உள்துறை செயலர், தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x