

அயோடின் கலந்த உப்பை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரிய மனு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெயபாலன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தூத்துக்குடி உப்பளங்களில் இயற்கை முறையில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.
இந்தத் தொழிலில் பல ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். இதனிடையே ‘அயோடின் கலந்த உப்பை மட்டுமே விற்க வேண்டும், சாதாரண உப்பை விற்கக்கூடாது’ என உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்ட விதியில் 2019-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இந்தச் சட்டத்திருத்தத்துக்கு பிறகு ஒவ்வொரு மாவட்டங்களிலும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உப்புக்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதனால் பல ஆண்டுகளாக உப்பு உற்பத்தித் தொழிலில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இயற்கை உப்பு மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதது. மனிதனுக்கு தேவையான அயோடின் சத்தை வேறு வகையில் பெறலாம். எனவே அயோடின் உப்பை மட்டுமே விற்க வேண்டும் என்ற சட்டத் திருத்தத்தை ரத்து செய்து, இயற்கை உப்பை விற்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனு தொடர்பாக மத்திய அரசின் சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.