

'மீண்டும் ஒரு பிரிவினைக்கு இந்தியாவை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் பயங்கரவாதிகள்' என தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்தும், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் போராடும் தீய சக்திகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான பொன் ராதாகிருஷ்ணன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் நன்மைகள் பற்றி விளக்கப்பட்டது. போராட்டக்காரர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி பேரணி நடைபெற்றது. தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து பேரணி தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்ற பேரணியை வேம்படி இசக்கியம்மன் கோயில் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து முக்கிய நிர்வாகிகள் மட்டும் வாகனங்களில் ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பொன் ராதகிருஷ்ணன், "நாட்டிற்கு எதிராக அடுத்த யுத்தம் என தேசதுரோகிகள் களம் இறக்கிவிடபட்டுள்ளனர்.
இப்படிப்பட்ட சக்திகள் நசுக்கப்பட வேண்டும். பயங்கரவாதிகள் மீண்டும் பிரிவினைவாதத்திற்குத் தயாராகி வருகிறார்கள். அதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மதத்தலைவர்கள் அரசியலில் புகுந்து கலவரத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.
இலங்கைத் தமிழர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையில் குடியுரிமை வழங்கப்படும்" என்றார்.
ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.