

மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக ஏற்கெனவே பேசிய அடிப்படையில் 2 நாளில் முதல்வரைச் சந்தித்து உரிமையைக் கேட்போம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார்.
அதிமுகவைக் கடுமையாக எதிர்த்து வந்த தேமுதிக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் திடீரென இணைந்தது. ஆனால், அந்தத் தேர்தலில் 4-ல் ஒரு இடத்தைக்கூட தேமுதிகவால் வெல்ல முடியவில்லை. அதிமுக கூட்டணியில் இணைந்த பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுக வழங்கியது. அதேபோல் தங்களுக்கும் தற்போது ஒரு எம்.பி. பதவியை அளிக்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்தி வருகிறது.
சென்னை வேப்பேரியில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் இதுகுறித்தும் நடைமுறை நிகழ்வுகள் குறித்தும் கேட்டனர்.
அதற்கு பிரேமலதா அளித்த பதில்:
“டெல்லி கலவரம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது. இங்கு சிஏஏ பற்றி சரியான புரிதல் இல்லை. குடியுரிமைச் சட்டம் நாட்டிற்கு நலன் என்றால் அதனை நாங்கள் வரவேற்போம் அதேநேரத்தில் அது பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என்றால், அதனை முதல் ஆளாக தேமுதிக எதிர்க்கும்.
குடியுரிமைச் சட்டம் எந்த ஒரு மதத்திற்கும் எதிரானது அல்ல. இச்சட்டத்தால் இங்கு வாழும் மக்களுக்கு பிரச்சினை இல்லை என்பதைப் புரியவைக்க வேண்டும். இதனை வைத்து அரசியல் செய்யக்கூடாது.
டெல்லி வன்முறை தொடர்பாக ரஜினி கூறிய கருத்திற்கு நான் பதில் கூற விரும்பவில்லை. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலைப் பொறுத்தவரை, தேர்தலில் கூட்டணி அமைக்கும்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாகக் கூறினார்கள்.
நாங்கள் கூட்டணி தர்மத்தோடு இருக்கிறோம். இன்னும் இரு தினங்களில் தேமுதிக நிர்வாகிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து எங்கள் உரிமையைக் கேட்போம்”.
இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.
தமிழக அரசியல் களத்தில் ரஜினி வருகை, அதையொட்டி கூட்டணி மாற்றம் போன்றவற்றை வைத்து தங்களுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியை நெருக்கிப் பெற தேமுதிக முயல்வதாகவும், அதில் வெற்றி கிடைக்கவும் வாய்ப்புண்டு என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.