

செங்கல்பட்டு அருகே நேற்று முன்தினம் நடந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் திண்டிவனம் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த அபினேஷ் பாபு (45) என்பவரும், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா ஆலங்குடியைச் சேர்ந்த மோகன் என்பவரும் இணைந்து சில ஆண்டுகளுக்கு முன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இதனால், இருவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் செஞ்சி அருகே உள்ள மேல்சேவூர் கிராமத்தில் கட்டி வரும் கோயிலை பார்க்க நேற்று முன்தினம் காரில் அபினேஷ்பாபு வந்து கொண்டிருந்தார். செங்கல்பட்டு அருகே உள்ள பரணூர் சுங்கச்சாவடி அருகே காரை நிறுத்திவிட்டு அவர் இளநீர் குடித்துக் கொண்டிருந்தபோது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் கத்தியால் அபினேஷ் பாபுவை வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக செங்கல்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆலங்குடியைச் சேர்ந்த மோகன், அருண்பிரபு, வினோத் மற்றும் சென்னை திம்மாபுரத்தைச் சேர்ந்த பிரேம்குமார் ஆகிய 4 பேர் நேற்று திண்டிவனம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி தாவூத் அம்மா முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து 4 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொலை வழக்கில் திண்டிவனம் நீதிமன்றத்தில் சரணடைந்த 4 பேரை சிறைக்கு அழைத்துச் செல்லும் போலீஸார்.