

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்கவிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை திமுக தலைமை அறிவித்துள்ளது.
திமுகவுக்கு நாடாளுமன்றத்தில் 35 எம்.பி.க்கள் உள்ளனர். மாநிலங்கவையில் 5 உறுப்பினர்கள் பலம் உள்ளது. கடந்த கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் பெரிய பங்களிப்பை ஆற்றினர். பல எம்.பி.க்கள் வலுவான வாதங்களை வைத்தனர்.
தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கூட்டம் வரும் மார்ச் 2-ம் தேதி தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை நடக்கிறது. இதில் பல்வேறு பிரச்சினைகள் எழுப்பப்பட உள்ளன. இது தவிர மத்திய அரசின் சிஏஏ சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள், டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு உள்ளிட்ட தமிழகம் சார்ந்த பல பிரச்சினைகள் உள்ளன.
இதில் திமுக எம்.பி.க்களின் பங்களிப்பு, அவர்கள் எடுத்து வைக்கவேண்டிய வாதம் , நாடாளுமன்றச் செயல்பாடு உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெற உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென எம்.பி.க்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்த திமுக தலைமை அறிவிப்பு:
''திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், 29-2-2020 சனிக்கிழமைகாலை 10 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுவதாக இருந்தது.
கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் ஒத்தி வைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’’.
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக எம்.எல்.ஏக்களின் அடுத்தடுத்த மரணம் காரணமாக இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.