Published : 22 Aug 2015 07:54 AM
Last Updated : 22 Aug 2015 07:54 AM

பெண் டாக்டர் கொலை வழக்கு: டாக்டர்கள் மனித சங்கிலி, சாலை மறியல்

பெண் டாக்டரை கொலை செய்தவரை கைது செய்யக்கோரி டாக்டர்கள் மனித சங்கிலி மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் கும்மாலம்மன் கோயில் தெருவில் வசித்துவந்த பெண் டாக்டர் சத்யா (32) நேற்று முன்தினம் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளியைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, “இந்த கொலை நகை மற்றும் பணத்துக்காக நடந்ததாக தெரியவில்லை. தெரிந்த நபர்தான் கொலையை செய்திருக்க வேண்டும். சத்யாவின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அவர் தங்கியிருந்த குடியிருப்பில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சத்யாவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப் பட்டு நேற்று அவரது உறவினர் களிடம் ஒப்படைக் கப்பட்டது. இந்நிலையில் சத்யாவை கொலை செய்தவரை கண்டுபிடித்து அதிக பட்ச தண்டனை வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் தலைமையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவக் கல்வி இயக்ககம் அலுவலகம் வரை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.

இது தொடர்பாக அரசு டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் பி.பால கிருஷ்ணன் மற்றும் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் ஆலோசகர் டாக்டர் க.இளஞ்சேரலாதன் ஆகியோர் கூறியதாவது:

திருமணத்துக்கு பிறகுதான் பெரும்பாலான பெண் டாக்டர்கள் மருத்துவ பட்ட மேற்படிப்பு படிக்க வருகின்றனர். அதனால் அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் குடும்பத்துடன் தங்குவதற்கு குடியிருப்பு வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும். சத்யாவின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியை தமிழக முதல்வர் வழங்க வேண்டும். அவருடைய 2 குழந்தைகளின் படிப்பு செலவு முழுவதையும் தமிழக அரசு ஏற்க வேண்டும். சத்யாவை கொலை செய்த கொலையாளியை விரைவாக பிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x