

வேலூர் பெண்கள் சிறையில் நளினியை செல்போன் வழக்கில் சிக்க வைக்க சதி நடைபெறுகிறது. எனவே, தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி நளினி மனு அளித்துள்ளார் என அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.
வேலூர் பெண்கள் சிறையில்அடைக்கப்பட்டுள்ள நளினியை அவரது வழக்கறிஞர் புகழேந்திநேற்று சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வேலூர் சிறையில்சில நாட்களுக்கு முன்பு மைதிலிஎன்ற கைதியிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த செல்போனைதான் ஒருபோதும் பயன்படுத்தவில்லை என மைதிலி சிறை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அந்த செல்போனை வைத்தவர் ஒரு சிறை வார்டர் என தெரியவந்துள்ளது. அவரிடம் விசாரித்தபோது, ஒரு உயர் அதிகாரியின் அழுத்தம் காரணமாக அந்த செல்போனை அவர் சிறைக்குள் எடுத்து வந்துள்ளார்.
நளினியின் அறையில் அந்தசெல்போனை வைத்து, அதன் மூலம் அவரை சிக்க வைக்க சதி செய்துள்ளனர். இந்த தகவல்நளினியின் கவனத்துக்கு சென்றுள்ளது. செல்போன் வழக்கில் தன்னை சிக்க வைக்க சிறை அதிகாரிகள் முயற்சி செய்யும் தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதன்காரணமாகவே, அவர் சரியானமுறையில் உணவு எடுத்துக்கொள்ளவில்லை.
மேலும், தனது பெற்றோர் சென்னையில் இருப்பதால் சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி சிறைத்துறை தலைவருக்கு வேலூர் சிறை கண்காணிப்பாளர் வழியாக நளினி கடிதம் கொடுத்துள்ளார்’’ என்று தெரிவித்தார்.