

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 11, 12, 13 ஆகிய 3 நாட்கள்வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
அகில இந்திய வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தமிழ்நாடு- புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் ஜி.கிருபாகரன் தலைமையில் திருச்சியில் நேற்று காங்கிரஸ் எம்பி சு.திருநாவுக்கரசரைச் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் கிருபாகரன் கூறியதாவது:
ஊதிய உயர்வு கேட்டு அகிலஇந்திய அளவில் பொதுத்துறை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் 10 லட்சம் பேர் கடந்த 3 மாதங்களாக தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு இந்திய வங்கிகள் சங்கமும், அகில இந்திய வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வை நிர்ணயிக்க வேண்டும்.
இதன்படி, எங்களுக்கு 2017-ல்வழங்கியிருக்க வேண்டிய ஊதிய உயர்வை, கடந்த 26 மாதங்களாக, 40 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை இறுதி செய்யாமல் மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது.
பெருநிறுவனங்கள் பெற்ற கோடிக்கணக்கான ரூபாய் வாராக்கடன்களை தள்ளுபடி செய்துவிட்டு, எங்களுக்கு ஊதிய உயர்வு தராததற்கு அதைக் காரணம் காட்டுவது சரியல்ல.
கடந்த மாதம் 2 நாட்கள் வேலைநிறுத்தம் செய்த நிலையில், மார்ச் 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். அதற்கும் இந்திய வங்கிகள்சங்கமும், மத்திய அரசும் செவிசாய்க்கவில்லை என்றால் ஏப்.1-ம்தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தைத் தொடங்க உள்ளோம்" என்றார்.