

நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம்இல்லாமல் இயங்கும் ஆலைகளை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த உரிமம் பெறுவதற்கான வழிவகைகளை உருவாக்க வலியுறுத்தி கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 1,689 கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் உள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலைகள் உள்ளன. இந்தமாவட்டங்களில் மட்டும் தினமும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கேன் குடிநீர் விற்பனையாகிறது.
இதற்கிடையே அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதைத் தடுக்க 2014-ம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதைக் கட்டுப்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கும் தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதனால் கேன் குடிநீர் உற்பத்தி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
எனவே, நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமத்தை எளிய முறையில் பெறுவதற்கான வழிவகைகளை தமிழக அரசு உருவாக்க வலியுறுத்தி, கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் நேற்று (பிப்.27) மாலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.ராஜசேகரன் கூறியதாவது: நிலத்தடி நீர் எடுப்பதைக்கட்டுப்படுத்த 2014-ல் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு குடிநீர் ஆலை தொடங்குபவர்களுக்கே இந்தச் சட்டம் பொருந்தவேண்டும். ஆனால், 2014- க்கு முன்புகுடிநீர் ஆலை நடத்துபவர்களும் உரிமம் பெற வேண்டும் என உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அதற்கான வழிவகைகளைக் காணும்படியும் தமிழக அரசை அறிவுறுத்தியது. ஆனால்,இதுவரை வழிவகைகள் உருவாக்கப்படவில்லை.
தமிழகத்தில் நிலத்தடி நீர் எடுக்கபாதுகாப்பான பகுதி, அபாயகரமானது, மிகவும் அபாயகரமானது, அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்ட பகுதி என பல்வேறு வகைப்பாடுகள் உள்ளன.
மேலும், ஒரு ஆழ்குழாய் கிணறுக்கும் அடுத்த ஆழ்குழாய் கிணறுக்கும் இடையே 175 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. இதுபோன்ற காரணங்களால் நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் வாங்க முடியாமல் ஏராளமானோர் தவிக்கின்றனர்.
உயர் நீதிமன்ற உத்தரவால் 1,300 குடிநீர் ஆலைகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. கேன் குடிநீர் உற்பத்தியை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் உள்ள 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் உள்ள 1,689 குடிநீர் ஆலைகளும் உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம், பிஐஎஸ்-யிடம் இருந்து தரக்கட்டுப்பாட்டு சான்றிதழுடன் இயங்குகின்றன. நிலத்தடிநீர் எடுப்பதற்கான உரிமம் பெறும்வழிமுறைகளை அரசு உடனடியாக உருவாக்கக் கோரி வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக பெருநகர சென்னை கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க நிறுவனர் வி.முரளிகூறும்போது, “குடிநீர் தேவைக்காக மட்டுமே நிலத்தடி நீர் எடுக்கிறோம். தொழில்துறையின் தேவைக்காக எடுக்கவில்லை. குடிநீர் ஆலைகள்,எளிய முறையில் நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் பெற அரசு உடனடியாக கொள்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்படி செயல்படும் எங்கள் ஆலைகளை மூடினால், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்போர் எண்ணிக்கை அதிகமாகிவிடும். இதில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்” என்றார்.