Published : 28 Feb 2020 08:26 AM
Last Updated : 28 Feb 2020 08:26 AM

திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி மறைவு: ஆளுநர் இரங்கல்; மு.க.ஸ்டாலின் அஞ்சலி

முன்னாள் அமைச்சரும், திருவொற்றியூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பி.பி. சாமி (57) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 6 மாதங்களாக சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கே.பி.பி.சாமி, நேற்று காலை மரணம் அடைந்தார். திருவொற்றியூர் கே.வி.கே.குப்பத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, மகளிரணி செயலாளர் கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, எம்.பி.க்கள் டி.கே.எஸ். இளங்கோவன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் பி.கே.சேகர்பாபு, ரங்கநாதன், மாதவரம் சுதர்சனம், வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். கே.பி.பி.சாமியின் மகன் பரசு பிரபாகரன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

திமுக மீனவரணிச் செயலாள ராக இருந்த கே.பி.பி.சாமி, கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் வெற்றி பெற்று, மீன்வளத் துறை அமைச்சரானார். 2011 தேர்தலில் தோல்வி அடைந்தவர், 2016-ல்மீண்டும் திருவொற்றியூரில் வென்று2-வது முறையாக எம்எல்ஏ ஆனார்.

கே.பி.பி.சாமியின் தந்தை பரசுராமன், திருவொற்றியூர் நகராட்சி உறுப்பினராக இருந்தவர். தந்தை் வழியில் அரசியலுக்கு வந்த சாமி, கட்சியில் பல்வேறு பதவிகளைப் பெற்று, பின்னர் அமைச்சர் பதவி வரை உயர்ந்தார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார்.

கே.பி.பி.சாமியின் மனைவி உமா, மூத்த மகன் இனியவன் ஆகியோர் ஏற்கெனவே காலமாகிவிட்டனர். தற்போது பரசு பிரபாகரன் என்ற மகனும், உதயா என்றமகளும் உள்ளனர். திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் தெரு அருகே உள்ள மயானத்தில் அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கே.பி.பி.சாமியின் மறைவுக்கு தமிழக ஆளுநர், அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.சாமியின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவரது மறைவு திருவொற்றியூர் தொகுதி மக்களுக்கு பேரிழப்பாகும். கே.பி.பி.சாமியை இழந்து வாழும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். அவரது இழப்பை தாங்கிக் கொள்ளும் மன வலிமையை குடும்பத்தாருக்கு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகிறேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: கே.பி.பி.சாமியின் திடீர் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். திமுக இளைஞரணி மாவட்டஅமைப்பாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், மாநில மீனவர் அணிச் செயலாளர் ஆகிய பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி கருணாநிதியின் அன்பையும், பாராட்டையும் பெற்றவர். மீன்வளத் துறை அமைச்சராக இருந்தபோது முதல்வராக இருந்த கருணாநிதியிடமும், துணை முதல்வராக இருந்த என்னிடமும் வாதாடி மீனவர்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்.

மக்களுக்காகவும், மீனவர் சமுதாயத்துக்காவும் இரவு பகலாக பணியாற்றும் ஒரு செயல் வீரரை திருவொற்றியூர் தொகுதி மக்கள் இழந்து வாடுகின்றனர். திமுகவின் போராட்டங்களை நடத்தவும், உற்சாகமிக்க தொண்டர்களை உருவாக்கவும் ஆர்வம் குறையாமல் தொடர்ந்து உழைத்து வந்த கே.பி.பி.சாமியை இழந்து நானும், திமுக தொண்டர்களும் தவிக்கிறோம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: மீனவர் சமுதாயத்தின் நலனுக்காக அரும்பாடுபட்ட, மீனவர்களின் உரிமைகளை காக்க போராடிய கே.பி.பி.சாமியின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும்குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் கே.பி.பி.சாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x