

இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்டவிபத்து தொடர்பான விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன் இயக்குநர் ஷங்கர் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
சென்னை பூந்தமல்லி அருகே ‘ஈவிபி பிலிம் சிட்டி’யில், கமல்ஹாசன் நடித்துவரும் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. கடந்த 19-ம் தேதி இரவு நடைபெற்ற படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்து தொடர்பாக சென்னை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நசரத்பேட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையை தொடங்கினர். முதல்கட்டமாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் சி.ஈஸ்வரமூர்த்தி, துணை ஆணையர் ஜி.நாகஜோதி ஆகியோர் விபத்து நிகழ்ந்தஇடத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து ‘இந்தியன்2’ திரைப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவன நிர்வாகிகளுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர். இயக்குநர் ஷங்கருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குநர் ஷங்கர் நேற்று காலை ஆஜரானார். அவரிடம், “படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டது எப்படி? நீங்கள் அப்போது எங்கு இருந்தீர்கள்? படப்பிடிப்பின்போது முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததா?” என்பன உட்படபல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. சுமார் இரண்டரை மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.
ஷங்கர் அளித்த அனைத்து தகவல்களையும் போலீஸார் வீடியோவாகவும், எழுத்து பூர்வமாகவும் பதிவு செய்துள்ளனர். அடுத்ததாக நடிகர் கமல்ஹாசன், நடிகை காஜல் உள்ளிட்டோரையும் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக விபத்து நிகழ்ந்தபோது இயக்குர் ஷங்கர் சமூக வலைதளப் பக்கத்தில் தனது வருத்தத்தைப் பகிர்ந்திருந்தார். அதில் ‘மோசமான விபத்து நடந்தநாளிலிருந்து நான் அதிர்ச்சியில்இருக்கிறேன். எனது உதவி இயக்குநர், குழுவைச் சேர்ந்தவர்களின் மரணத்தை நினைத்துத் தூக்கம் வருவதில்லை. நூலிழையில் அந்த கிரேன் விபத்திலிருந்து தப்பித்தேன். ஆனால், அது என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்” என்று உருக்கமாக பதிவிட்டி ருந்தார். ஷங்கர் அளித்த அனைத்து தகவல்களையும் போலீஸார் வீடியோவாகவும், எழுத்து பூர்வமாகவும் பதிவு செய்துள்ளனர்.