

விளம்பரங்களை வெளியிடுவதில் ஊடக நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று ‘இந்து' என்.ராம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை நிருபர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற, ‘ஊடகத் துறையும் விளம்பர சர்ச்சைகளும்' என்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
முக்கியமான பிரச்சினைகளின்போது தமிழ் செய்தி சேனல்களில் செய்திகள், அலசல்கள், விவாதங்கள் சிறப்பாகவே உள்ளன. சில ஆங்கில செய்தி சேனல்களைப் போல உரத்த குரலில், உணர்ச்சிகளை தூண்டுவதாகஇல்லாமல் மக்களுக்கு உண்மைகளைச் சொல்ல வேண்டும். செய்தியின் பின்னணியை ஆழமாக அலசுகிறார்கள். அந்த வகையில் தமிழ்செய்தி சேனல்கள் ஊடக நெறிமுறைகளை பின்பற்றுகின்றன. இது மகிழ்ச்சி அளிக்கிறது.
விளம்பரங்களை வெளியிடும்போது ஊடக நிறுவனங்களும், அதில் சம்பந்தப்பட்ட அனைவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம். செய்தியின் உண்மைத்தன்மை, ஊடக நெறிகளுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இணையதளங்கள், சமூக ஊடகங்களில் எவ்வித நெறிமுறைகளும் கட்டுப்பாடுகளும் இல்லாமல் விளம்பரங்கள் வருவதாக இங்கே பேசிய பலரும் குறிப்பிட்டார்கள். இது உண்மை. இணையதளங்களில் விளம்பரங்களை கட்டுப்படுத்துவது கடினமானது. ஆனாலும், இணையதளவிளம்பரங்களை நெறிமுறைப்படுத்த கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு என்.ராம் பேசினார்.
சென்னை நிருபர்கள் சங்கத்தின் தலைவர் ஆர். ரங்கராஜ் பேசும்போது, ‘‘தமிழ் செய்தி தொலைக்காட்சி நெறியாளர்களை கேலி செய்து வெளியான விளம்பரம் மனதுக்கு பெரும் வேதனை அளித்தது. அவர்கள் நெறியாளர்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்கள். செய்தி சேனல்களின் ஆசிரியர்கள். எனவே, அவர்கள் பக்கம் நிற்கிறோம் என்பதை உணர்த்துவதற்காகவே இந்திய விளம்பர நெறிமுறைகள் கவுன்சிலில் புகார் அளித்தோம். வெற்றியும் பெற்றுள்ளோம்’’ என்றார்.
கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளர்கள் பாரதி தமிழன், மு.குணசேகரன், எஸ்.கார்த்திகைச்செல்வன் உள்ளிட்டோர் பேசினர். ரஜினி நிலைப்பாட்டில் ஏற்பட்ட
மாற்றத்துக்கு வரவேற்பு
கருத்தரங்கில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் என்.ராம் கூறியதாவது: குடியுரிமைச் சட்டத்தை பாஜக அரசு திரும்பப் பெறாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது சரிதான். சட்டம் திரும்பப் பெறப்படும் என்ற நம்பிக்கை எனக்கும் இல்லை. இச்சட்டத்தை திரும்பப் பெறக்கூடாது என்று ரஜினிகாந்த் கூறியிருந்தால் அது தவறு. குடியுரிமைச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி பற்றி முழுமையாக படித்து தெரிந்துகொள்ளாமல் மேலோட்டமாக பார்த்து ரஜினி கருத்து கூறிவிட்டார் என்று நினைக்கிறேன். மூத்த வழக்கறிஞர்கள் பலர் இதுபற்றி விரிவாக ஆராய்ந்து கட்டுரைகள் எழுதியுள்ளனர். குடியுரிமைச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி பற்ற ரஜினிகாந்த் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். வேண்டுமானால் அவருக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். இப்போது ரஜினியின் நிலைப்பாட்டில் மாற்றம் தெரிகிறது. டெல்லி கலவரத்தை தடுக்கத் தவறிய காவல் துறையையும், மத்திய அரசையும் ரஜினி கண்டித்துள்ளது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.