Published : 28 Feb 2020 08:14 AM
Last Updated : 28 Feb 2020 08:14 AM

கடலோர காவல் படையின் ஆழ்கடல் ரோந்து கப்பல் சேவை- மத்திய இணை அமைச்சர் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ என்ற திட்டத்தின் கீழ், மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் எல் அன்டு டி நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட, இந்திய கடலோர காவல் படைக்கான ஆழ்கடல் ரோந்து கப்பல் சேவையை தொடங்கிவைக்கிறார் மத்திய கப்பல் துறை இணையமைச்சர் மன்சுக் மண்டாவியா. உடன் கடலோரப் பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் கே. நடராஜன், கிழக்கு பிராந்திய ஐஜி எஸ்.பரமேஷ் உள்ளிட்டோர். படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்

சென்னை

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் இந்திய கடலோர காவல் படையின் 6-வது ஆழ்கடல் ரோந்து கப்பல் சேவையை மத்திய இணை அமைச்சர் மன்சுக் மண்டாவியா நேற்று தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் பாதுகாப்பு அமைச்சகத்துக்கும், எல் அண்டு டி நிறுவனத்துக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டுசெய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இந்திய கடலோரப் பாதுகாப்புப் படைக்கு தேவையான 7 ஆழ்கடல் ரோந்து கப்பல்களை கட்டுவதற்கான ஒப்பந்தம் அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின்படி கட்டப்பட்ட 6-வது கப்பல் சேவை தொடக்க விழா காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்டு டி கப்பல் கட்டும்நிறுவன வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் மன்சுக் மண்டாவியா பங்கேற்று, கப்பல் சேவையை தொடங்கி வைத்தார்.

2,100 டன் எடை

இந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பல், விரிவான பரிசோதனைகளுக்குப் பிறகு, அக்டோபர் மாதம் இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையில் பணியில் ஈடுபடுத்தப்படும். இந்த ரோந்து கப்பல், 98 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம் கொண்டது. அதன் மொத்த எடை 2,100 டன். இந்தக் கப்பல் 5 ஆயிரம் கடல் மைல் தொலைவுக்கு செல்லக் கூடியதாகும். தலா 9 ஆயிரம் கிலோ வாட் திறன் கொண்ட இரட்டை டீசல் இஞ்ஜின்களால் இக்கப்பல் இயக்கப்படும். இந்தக் கப்பல், குறைந்த எரிபொருள் செலவில் அதிகபட்சமாக மணிக்கு 26 கடல் மைல் வேகத்தில் செல்லும். இந்தக் கப்பலில் சி.ஆர்.என்-91 மற்றும் இரு 12.7 மிமீ துப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருப்பதுடன், இரட்டை இஞ்ஜின் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவில் இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் கே. நடராஜன், கிழக்கு பிராந்திய ஐஜி எஸ்.பரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x