

அக்டோபர் 31-ம் தேதிக்கு பிறகு நொளம்பூரில் குப்பை மாற்றுமிடம் செயல்படக் கூடாது என்று சென்னை மாநகராட்சிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வு நேற்று உத்தரவிட்டுள்ளது.
நொளம்பூரில் கூவம் ஆற்றங்கரையில் மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வில் வி.பிரபாகரன் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மாற்று இடம் தேடி வருவதாகவும், அதுவரை அப்பகுதியில் குப்பையைக் கொட்டாமல், குப்பை மாற்றுமிடமாக பயன்படுத்த மாநகராட்சி அனுமதி கோரியதற்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில் இம்மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்று இடம் தேர்வு செய்வதற்காக அக்டோபர் 31-ம் தேதி வரை நொளம்பூரில் குப்பை மாற்றுமிடம் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.
பின்னர், அக்டோபர் 31-ம் தேதி வரை நொளம்பூரில் குப்பை மாற்றுமிடம் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. அதற்கு பிறகு அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்ட அமர்வின் உறுப்பினர்கள், மனு மீதான அடுத்த விசாரணையை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.