

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பமும், பிரத்யேக கருவியும் நாட்டிலேயே முதல்முறையாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உறுப்பு மாற்று சிகிச்சையைப் பொருத்தவரை சிறுநீரகம், விழித்திரைக்கு அடுத்தபடியாக கல்லீரல்களே அதிக அளவில் தானமாகப் பெறப்பட்டு பயனாளிகளுக்கு பொருத்தப்பட்டு வருகின்றன. ஆனால், கல்லீரலை தானமாக அளிக்க முன்வரும் பலருக்கும் கல்லீரல் கொழுப்பு பாதிப்பு அதிகம் இருக்கிறது. இதனால், கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு தகுதியான கொடையாளிகள் கிடைப்பதில் சிரமம் உள்ளது.
கலந்துரையாடல்
இந்த சூழலில், 30 சதவீதம் வரை கொழுப்பு பாதிப்பு உள்ள கல்லீரலையும் உறுப்பு மாற்று சிகிச்சையில் பயன்படுத்தும் தொழில்நுட்பம் குறித்த கலந்துரையாடல் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் நேற்று நடந்தது.
இதில், பிரிட்டனில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையின் கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆண்ட்ரியா ஸ்கிலீகல், மியாட் மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத் துறை முதுநிலை மருத்துவர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கலந்துரையாடலில் அவர்கள் கூறியதாவது:
கொழுப்பு பாதிப்பு இருந்தால்
மனித உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரலை வெளியே எடுத்த பிறகு, குறிப்பிட்ட கால வரம்பு வரை, அதிலும் குறிப்பாக சில மருத்துவ தொழில்நுட்பங்களின் உதவியுடன்தான் அவற்றை உயிர்ப்புடன் பாதுகாக்க முடியும். கல்லீரலை பொருத்தவரை கொழுப்பு பாதிப்பு இருந்தால், அதை வெளியே எடுத்து பாதுகாத்தாலும் பயனாளிகளுக்கு பொருத்த முடியாத நிலை இருந்தது.
இந்த சூழலில்தான் ‘ஹைப்போதெர்மிக் ஆக்சிஜனேட்டட் பெர்ஃப்யூஷன் (ஹோப்)’ எனப்படும் நவீன தொழில்நுட்பமும், அதற்கான பிரத்யேக கருவியும் உலக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்தியாவில் முதல்முறையாக இந்த தொழில்நுட்பம் மற்றும் கருவியை மியாட் மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் 96 சதவீதம் கல்லீரல், சிறுநீரகங்களை துல்லியமாக பாதுகாத்து வெற்றிகரமாக பயனாளிகளுக்கு பொருத்த முடியும். இந்த தொழில்நுட்பம் மற்றும் கருவியை கையாள மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.