Published : 28 Feb 2020 07:56 AM
Last Updated : 28 Feb 2020 07:56 AM

இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: கோடை காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும்: தமிழகத்தில் பாதிப்பு இல்லை என எஸ்.பாலசந்திரன் தகவல்

சென்னை

இந்த ஆண்டு கோடை காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் வெப்பநிலை வழக்கமான அளவே இருக்கும் என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும், கோடை மற்றும் குளிர் தொடர்பான பருவகால வானிலை முன்னறிவிப்புகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு பருவமழைக்கு முந்தைய காலமான கோடை காலத்தில் (மார்ச், ஏப்ரல், மே) வெப்பநிலை எப்படி இருக்கும் என்பது குறித்த முன்னறிவிப்பை நேற்று வெளியிட்டது.

அதில், இந்த ஆண்டு கோடை காலத்தில், நாட்டின் வட மேற்கு, மேற்கு மற்றும் மத்திய இந்திய பகுதிகள், தென்னிந்தியாவின் சில பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் வழக்கத்தை விட உயர வாய்ப்புள்ளதாகவும், அது வெப்ப அலையாக மாறவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

வெப்பநிலை தொடர்பான இந்த அறிவிப்பு அடுத்து வரும் 3 மாதங்களுக்கானதாகும். இதில் உத்தரப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா, கோவா, குஜராத், கடலோர கர்நாடகம், கேரளா, வட கர்நாடகத்தின் உள்பகுதிகளில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரிக்கும் என்றும், இதர பகுதிகளில் இயல்பை ஒட்டியே இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தமிழகத்தில் கோடை காலத்தில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும். அதனால் பொதுமக்கள் யாரும் வெப்பநிலை உயர்வு தொடர்பாக அச்சப்படத் தேவையில்லை. வெப்பநிலை உயர வாய்ப்பிருந்தால், அது தொடர்பாக உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x