Last Updated : 28 Feb, 2020 07:27 AM

 

Published : 28 Feb 2020 07:27 AM
Last Updated : 28 Feb 2020 07:27 AM

தனியார்மயமாகிறதா தமிழக நில அளவைத் துறை?- 63 சதவீத காலியிடத்தால் மறு நில அளவை செய்வதில் சிக்கல்

தமிழகத்தில் நில அளவைத் துறையில் 63 சதவீத பணியிடங்கள் காலியாக இருப்பதால், மறு நில அளவைச் செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில், நில அளவைப் பணியை தனியார்மயமாக்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரசின் கொள்கை முடிவின்படி, நில அளவை மாற்றங்களை அறிய 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலஅளவை செய்ய வேண்டும். கடந்த 1979-ம் ஆண்டு மாநிலம் முழுவதும் நில உடமைப் பதிவுமேம்பாட்டு திட்டம் (யுடிஆர்) செயல்படுத்தப்பட்டது. அதன்மூலம் அப்போது இருந்த 169 வட்டங்கள் அளவீடு செய்யப்பட்டு 96 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டாக்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து 1988-ம் ஆண்டு நத்தம் நிலஅளவைத் திட்டம் மூலம் அப்போது இருந்த 28 மாவட்டங்களில் அளவீடு செய்யப்பட்டு 11.2 கோடி பட்டாக்கள் வரை படத்துடன் வழங்கப்பட்டன. 32 ஆண்டுகள் கடந்த நிலையில் நில அளவையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அரசு மறுநில அளவை செய்யவில்லை.

சமீபத்தில் வெளியிடப்பட்ட அரசாணையில் மணலி, அரியலூர், ஜெயங்கொண்டான், திருத்தங்கல், தூவாக்குடி, அம்பாசமுத்திரம், விக்ரமசிங்கபுரம் உள்ளிட்ட 29 நகரங்களில் நவீன கருவிகள் மூலம் மறுநில அளவை செய்யப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இப்பணி ரூ.30.29 கோடியில் 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்நிலையில், நிலஅளவைத் துறையில் 63 சதவீத பணியிடங் கள் காலியாக உள்ளன. அனு மதிக்கப்பட்ட 1,690 நில அளவையர் பணியிடங்களில் 547 இடங்கள், அனுமதிக்கப்பட்ட 586 பிர்க்கா நில அளவையர் பணியிடங்களில் 306, அனுமதிக்கப்பட்ட 1,536 சார்-ஆய்வாளர் பணியிடங்களில் 956 இடங்கள் காலியாக உள்ளன. இதனால் மறுநிலஅளவை செய்வ தில் சிக்கல் நீடிக்கிறது.

இதையடுத்து தனியார் சிலருக்கு பயிற்சி அளித்து நிலஅளவை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் நிலங்களின் மதிப்பு உயர்ந்து வருவதால், அதை அளவீடு செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தனியார் மூலம் மேற்கொண்டு, அதில் தவறு நடந்தால் தேவையில்லாத பிரச்சினை ஏற்படும். இதனால் காலியிடங்களை நிரப்பி முறையாக மறுஅளவீடு செய்ய வேண்டுமென, நிலஅளவைத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் நிலஅளவை செய்ய அரசு ஒப்புதல் அளித்ததற்கும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.

இதுகுறித்து நிலஅளவைத் துறையைச் சேர்ந்த சிலர் கூறிய தாவது:

8 விதமான திட்டம்

நிலஅளவைத் துறை 1853-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. ஜமீன் ஒழிப்புச் சட்டம், வீடற்ற ஏழைகளுக்கு நில எடுப்பு உள்ளிட்ட 8 விதமான திட்டங்களில் அளவீடு செய்து பட்டா வழங்கப்பட்டுள்ளது.

யுடிஆர்-ல் மட்டும் 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலம் எங்கள் துறையினரால் அளவீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் காலப்போக்கில் எங்கள் துறையில் காலியிடங்களை நிரப்பாமல் விட்டு விட்டனர்.

தற்போது தனியாருக்குப் பயிற்சி அளித்து நிலஅளவை மேற்கொள்ள உள்ளனர். இதன்மூலம் பல குழப்பங்கள் ஏற்படும். ஏற்கெனவே தனியார் மூலம் கணினிமயமாக்கப்பட்டதில் பல குளறுபடிகள் ஏற்பட்டன. அப்பிரச் சினை இன்னும் தீர்க்க முடியாமல் உள்ளது.

பொதுவாக நிலஅளவையை கிராம நிர்வாக அலுவலர்கள் கள ஆய்வு செய்ய வேண்டும். பணிப்பளுவால் அவர்கள் அப்பணியை செய்வதில்லை.

இந்நிலையில் சார்-பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட 6.86 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலங்களுக்கு பட்டா நிலுவையில் இருப்பதால் கிராம நிர்வாக அலுவலர்கள் நில அளவீடு செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவுக்கு விஏஓக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நிலஅளவைப் பணியில் தனியாரை ஈடுபடுத்தும் முடிவை கைவிட்டு, இத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பி மாநிலம் முழுவதும் மறுநில அளவை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நிலஅளவைத் துறை யைச் சேர்ந்தவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x