

காரைக்கால் - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
புதுச்சேரி யூனியன்பிரதேசத்துகுட்பட்ட காரைக்காலில் இருந்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
மத்திய கப்பல் போக்குவரத்து இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் புதுச்சேரி துறைமுகத்துறை அமைச்சர் கந்தசாமி, சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள் மற்றும் இந்திய இலங்கை துறைமுகத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின்னர் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காரைக்காலில் இருந்து இலங்கையில் ஜாப்னா துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தை விரைவில் செயல்படுத்த இருக்கிறோம். இதற்காக புதுச்சேரி தலைமைச் செயலர் தலைமையில், சுற்றுலாத்துறை, துறைமுகத் துறை செயலர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். அந்த குழுவினரின் பரிந்துரையின் பேரில் திட்டம் குறித்து விரைந்து முடிவு செய்யப்படும்.
பொது மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் மத்திய, மாநில அரசுகளின் ஆதரவோடு இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்தக் கப்பல் போக்குவரத்து மூலம் ஆன்மிக பயணமாக இலங்கையில் இருந்து அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் காரைக்காலுக்கு வருகை தருவார்கள். இதனால் காரைக்கால் அதைச் சுற்றியுள்ள தமிழகப் பகுதியில் சுற்றுலா மற்றும் தொழில்துறை வளர்ச்சி பெறும்’’ என்றார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறும்போது, ‘‘கப்பல் போக்குவரத்து தொடங்கிய பிறகு காரைக்காலில் இருந்து இலங்கையை 3 மணி நேரத்தில் அடையலாம். இதற்காக ரூ.7 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்படும். 4 ஆண்டு முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. நிதிச்சுமை இல்லாத வகையில் திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க புதுச்சேரி அரசு தயாராக உள்ளது. இது குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும், என்றார்.