மதுவுக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது: தமிழகம் முழுவதும் மறியல், முற்றுகை - ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கைது

மதுவுக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது: தமிழகம் முழுவதும் மறியல், முற்றுகை - ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கைது
Updated on
2 min read

தமிழகம் முழுவதும் மதுவிலக்கு கோரிக்கையை வலியுறுத்தி நடந்து வரும் போராட்டங்கள் மேலும் வலுத்து வருகிறது. மதிமுக உள்ளிட்ட கட்சிகள் நேற்று நடத்திய முழுஅடைப்பின்போது ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் பெண்கள், மாணவ, மாணவிகள் பெருமளவில் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நடந்த போராட்டத்தின்போது காந்திய வாதி சசிபெருமாள் மரணமடைந் தார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கின. கலிங்கப்பட்டியில் வைகோ தலைமையில் நடந்த போராட்டத் தில் போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர்புகை குண்டுகளை வீசியதால் பதற்றம் ஏற்பட்டது. அங்கிருந்த டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது.

சென்னையில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட பச்சை யப்பன் கல்லூரி மாணவ, மாணவிகளை போலீஸார் கடுமையாக தாக்கினர். 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதே நாளில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்தன.

இதற்கிடையே, முழு மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி 4-ம் தேதி (நேற்று) முழுஅடைப்பு போராட்டத்துக்கு மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை அழைப்பு விடுத்திருந்தன. இந்தப் போராட்டத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் வணிகர் சங்கங்களின் பேரவை உள்ளிட்ட சில அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.

முழு அடைப்பை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக முக்கிய அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களை நேற்று முன்தினம் இரவே போலீஸார் கைது செய்தனர். ரயில், பேருந்து நிலையங்கள், பேருந்து பணிமனைகள், கல்லூரிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், டாஸ்மாக் கடைகள் முன்பு போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

அரசுப் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கின. பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல செயல்பட்டன. சென்னை உட்பட பல இடங்களிலும் பெரும்பாலான கடைகள் திறந்தி ருந்தன. பல்வேறு இடங்களில் ஆர்ப் பாட்டம், மறியல், டாஸ்மாக் கடை முற்றுகை உள் ளிட்ட போராட்டங்களும் நடந்தன. இந்தப் போராட்டங்களில் ஏராள மான பெண்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர். சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட் டவர்களுக்கும் போலீஸாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

குமரியில் பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. கல்வீச்சு சம்பவங்களில் 25-க்கும் மேற்பட்ட பஸ்கள் உடைக்கப்பட்டன. 3 மாணவிகள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இந்த மாவட்டத் தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப் பட்டது. வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி, அதன் அருகேயுள்ள திருவேங்கடம் பகுதியில் முழு கடையடைப்பு நடை பெற்றது.

தமிழகம் முழுவதும்..

நெல்லை, தூத்துக்குடி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த போராட்டங்களில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று கைதாகினர். அவர்களில் கல்வீச்சு, டாஸ்மாக் கடை மீது தாக்குதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட சிலரைத் தவிர, மற்றவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in