Published : 27 Feb 2020 07:33 PM
Last Updated : 27 Feb 2020 07:33 PM

ரூ.45 கோடி வர்த்தக மையம் கட்டுமானப் பணி 15 நாளில் தொடக்கம்; வருவாய்க்காக அழிக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை தமுக்கம் மைதானம்

மதுரை

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை தமுக்கம் மைதானம் மாநகராட்சி வருவாய்க்காக அழிக்கப்பட்டு அதில் 45.55 கோடியில் வர்த்தக மையம் அமைய உள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் 15 நாளில் தொடங்குவதால் ஆண்டுதோறும் இங்கு நடக்கும் சித்திரைத் திருவிழா பொருட்காட்சி இந்த ஆண்டு எங்கு நடக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரையில் ஆண்டுதோறும் நடக்கும் மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா விஷேசமானது. இந்தத் திருவிழாவில் நடக்கும் மீனாட்சியம்மன் கோயில் தேர்த் திருவிழா, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சிகளைக் காண மதுரையில் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். அதனால், அரசின் சாதனைத் திட்டங்கள், மக்களுக்கான திட்டங்கள், விவசாயத் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை செயல்பாடுகள், திட்டங்களை விளக்கும் வகையில் சித்திரைத் திருவிழா பொருட்காட்சி, மாநகராட்சிக்கு சொந்தமான மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கும்.

இந்த தமுக்கம் மைதானத்திற்கு பல்வேறு வரலாற்று சிறப்புகள் உண்டு. மதுரை ஆட்சி செய்த ராணி மங்கம்மாள், வீர விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளித்தார். அவரது போர் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், யானைப் பந்தயம், குதிரைப் பந்தயம், ஜல்லிக்கட்டு, சிலம்பாட்டம், கத்திச் சண்டைகள் போன்றவீர விளையாட்டுகளை மதுரை தல்லாகுளத்தில் உள்ள இந்த தமுக்கம் மைதானத்தில் நடத்தி வந்தார்.

இந்த மதுரை தமுக்கம் மைதானம் தற்போது மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மைதானத்தை மாநகராட்சி, அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட்டு வந்தது. ஒரு நாள் வாடகையாக அரங்கு அமைப்பதைப் பொறுத்து ரூ.30 ஆயிரம் வரை வாடகை வசூல் செய்தது. தனியார் மண்டபங்களை ஒப்பிடும்போது இது மிக சொற்பக் கட்டணம். சித்திரைத் திருவிழா பொருட்காட்சி மட்டுமில்லாது, புத்தகக் கண்காட்சி உள்ளிட்டவையும் இங்கு நடக்கும். நகர்ப்பகுதியில் இந்த மைதானம் அமைந்துள்ளதால் மக்கள் எளிதாக இங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

தற்போது சென்னை வர்த்தக மையம்(Trade Center) போல், மதுரை தமுக்கம் மைதானத்தில் ரூ.45.55 கோடியில் வர்த்தக மையம் (convention center) அமைக்க உள்ளது. நகரின் மையத்தில் தமுக்கம் மைதானம் உள்ளதால் இந்த இடத்தில் வர்த்தக மையம் அமைத்தால் வணிக சந்தைகள், பொருட் காட்சி நடத்தி லட்சக்கணக்கில் வாடகை வசூல் செய்து வருமானத்தைப் பெருக்க மாநகராட்சி திட்டமிட்டுட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு டெண்டரும் விடப்பட்டு ஒர்க் ஆர்டர் கொடுக்கப்படும் நிலை உள்ளது. அதனால், இன்னும் 15 நாளில் வரலாற்றுச் சிறப்புமிக்க தமுக்கம் மைதானத்தில் வர்த்தக மையம் அமைக்கும் பணி தொடங்கிவிடும்.

இந்த சூழலில் மதுரை சித்திரைத் திருவிழா, மே மாதம் தொடங்குகிறது. இந்த சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக தமுக்கம் மைதானத்தில் நடக்கும் அரசு பொருட்காட்சி சிறப்புமிக்கது. இந்தப் பொருட்காட்சியை, சித்திரைத் திருவிழாவுக்கு வரும் மக்கள் கண்டுகளித்துச் செல்வார்கள். தற்போது தமுக்கம் மைதானத்தில் வர்த்தக மையம் கட்டுமானப் பணி தொடங்கிவிட்டதால் சித்திரைத் திருவிழா பொருட்காட்சியை இந்த ஆண்டு அங்கு நடத்த முடியாது. அதனால், இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா பொருட்காட்சியை மாவட்ட நிர்வாகம் எங்கு நடத்தப்போகிறது என்பது தெரியவில்லை.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ''மாட்டுத்தாவணி அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான காலியிடம் உள்ளது. இந்த இடத்தை பொருட்காட்சி நடத்த வழங்குவதற்கு ஆலோசிக்கிறோம். மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்'' என்றனர்.

வர்த்தக மையத்தால் நகரில் நெரிசல் அதிகரிக்கும்

வணிக நோக்கத்தில் வருமானத்தைப் பெருக்க மாநகராட்சி எடுத்த இந்த முடிவால் வரலாற்றுச் சிறப்புமிக்க தமுக்கம் மைதானம் கான்கிரீட் கட்டிடமாக மாற்றப்பட உள்ளது. அதன் பெருமையையும் இந்த மைதானம் இழக்கப்போகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும், வர்த்தக மையம் அமைந்தால் தினமும் நிகழ்ச்சி நடக்க வாய்ப்புள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வருவோர் 500க்கும் மேற்பட்ட கார்களில் வருவார்கள். அதனால், மதுரையின் மையப்பகுதியான தமுக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும். அதனால், வர்த்தக அமைப்பதோடு மாநகராட்சி தன்னுடைய கடமை முடிந்துவிட்டதாககருதாமல், இந்த வர்த்தக மையத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்தவும், அவர்கள் தடையின்றி எளிமையாக நகர்ப்பகுதியில் வந்து செல்லவும் பார்க்கிங் வசதி, விசாலமான சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x