

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாடகை வேனில் தொலைத்த ஏழரை பவுண் தங்க சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநரை காவல்துறையினரும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் சீனி பிச்சை. இவர் வாடகைக்கு வாகனங்களை இயக்கும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். பரமக்குடி அருகேயுள்ள மகிண்டியில் இருந்து அருப்புக்கோட்டைக்கு திருமண நிகழ்ச்சிக்கு தனது வாகனத்தை வாடகைக்கு அனுப்பியுள்ளார். வாகனத்தை மணிகண்டன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
புதன்கிழமை காலை அருப்புக்கோட்டை சென்றுவிட்டு, பின்னர் மீண்டும் மகிண்டியில் ஆட்களை இறக்கிவிட்டு வேனை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார் மணிகண்டன்.
வேனில் ஒரு தங்க சங்கிலி கேட்பாரற்று கிடந்துள்ளததை அப்போதுதான் அவர் அறிந்துள்ளார். உடனே, இதுகுறித்து தனது உரிமையாளர் சீனி பிச்சைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தங்க சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு உரிமையாளர் கூறியதைத் தொடர்ந்து பரமக்குடி காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சாரதாவிடம் தங்கச் சங்கிலியை மணிகண்டன் ஒப்படைத்துள்ளார்.
விசாரணையில், வாடகை வேனில் மகிண்டியைச் சார்ந்த கருப்பாயி என்பவர் தனது தங்க சங்கிலியை தொலைத்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் தங்க சங்கிலியை கருப்பாயிடம் காவல்துறையினர் ஒப்படைந்தனர்.
மேலும், வேனிலிருந்து தங்க சங்கிலியை மீட்டு, பத்திரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநர் மணிகண்டனை காவல்துறையினர் பாராட்டினர்.