

வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என ரஜினிகாந்த் கூறியுள்ளது நியாயமானது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளார்.
விருதுநகரில், வரும் மார்ச் 3-ம் தேதி மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார். இந்நிலையில் அதற்கான விழா ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்தார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என ரஜினிகாந்த் கூறியுள்ளது நியாயமானது.
மதக் கலவரங்களைத் தூண்டி விடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். அதைத்தான் நாங்களும் கூறுகிறோம்.
மதக் கலவரங்களை தூண்டி விட்டது திமுக தலைவர் ஸ்டாலின். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல் பிரச்சினையைப் பெரிதாக்கிவிட்டார்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, தமிழ்நாட்டில் ஸ்டாலின், டெல்லியில் கேஜ்ரிவால் போன்றவர்கள் சமூக விரோத சக்திகளைத் தூண்டிவிட்டதனால் அப்பாவி இஸ்லாமியர்கள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது" என்றார்.
சமூகப் பிரச்சினைக்கு கையெழுத்து வாங்கினாரா?
தொடர்ந்து பேசுகையில், "ஸ்டாலின் ஓடிஓடி கையெழுத்து வாங்கினாரே? மதப் பிரச்சினைக்கு இப்படி வாங்கியதுபோல் வேறு சமூகப்பிரச்சனைக்கு கையெழுத்து வாங்கியிருக்கிறாரா? இஸ்லாமிய மக்களின் மத்தியில் பயத்தை உண்டுபண்ணும் பணியை ஸ்டாலின் செய்துள்ளார்.
அதே பணியை இந்தியா முழுவதும் உள்ள சில தலைவர்கள் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஆதரவாக செய்வதன் காரணத்தினால்தான் ஏதுமறியாத அப்பாவி இஸ்லாமியர்கள் போராட்டக் களத்தில் இறங்குகிறார்கள். அவர்களை வன்முறைக்கு இழுத்துச்செல்லும் பணியைத்தான் சில கட்சிகள் செய்கின்றன.
திமுகவைப் போன்ற சில கட்சிகளும் மதத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளும் தான் டெல்லி வன்முறைக்கு காரணம்.
இந்தக் கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என ரஜினிகாந்த் சொல்வது நியாயமான கருத்து தான்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தினால் இங்கிருக்கும் இஸ்லாமியருக்கு எந்த பாதிப்பும் இல்லை என எடப்பாடியார் தெளிவாக சொல்லிவிட்டார். அவ்வாறு பாதிக்கப்பட்டால் நானே பொறுப்பு என்றும் கூறிவிட்டார்.
சட்டப்பேரவையில் ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவர வேண்டும் எனக் கோரினார். அதற்கு முதல்வர் இந்தச் சட்டத்தினால் யாராவது ஒருத்தர் பாதிக்கப்பட்டுள்ளாரா நீங்கள் கூறுங்கள் எனக் கூறினார் அதற்கு பதில் கூற முடியாமல் பேரவையில் இருந்து எழுந்து சென்றார் ஸ்டாலின். முதல்வரின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் புறமுதுகிட்டு ஓடினார் ஸ்டாலின்.
பேச வேண்டிய இடத்தில் பேசாமல் வெளியே சென்று விட்டு வெளியே வந்து, பிரச்சினையை உருவாக்குகிறார். இந்த அரசியலை எடப்பாடி ஒரு காலமும் செய்யமாட்டார். எளிமையாக உண்மையாக நடக்கக்கூடிய எடப்பாடியார் பின்னால் தான் இன்றைய தமிழகம் இருக்கிறது" என்று ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.
தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அதை முதல்வரும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் கூடி முடிவு செய்வார்கள்" என்றார்.