Published : 27 Feb 2020 02:15 PM
Last Updated : 27 Feb 2020 02:15 PM

தீபாவுக்கு வழக்குத் தொடர எந்தத் தகுதியும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் கவுதம் மேனன் பதில் மனு

ஜெயலலிதா - கவுதம் வாசுதேவ் மேனன் - ஜெ.தீபா

சென்னை

ஜெயலலிதாவைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறிய தீபாவுக்கு வழக்குத் தொடர எந்தத் தகுதியும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திரைப்பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கணா ரணாவத் நடிக்கும் 'தலைவி' என்ற தமிழ்ப் படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். அதேபோன்று, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் 'குயின்' என்ற இணையதளத் தமிழ்த் தொடரை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார்.

இந்நிலையில், தன் அனுமதியில்லாமல் வெளியாகும் 'தலைவி', 'ஜெயா', 'குயின்' ஆகிய படங்கள், இணையதளத் தொடருக்குத் தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ.தீபா உரிமையியல் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததையடுத்து, தீபா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனுவில், ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கும், தனது வாழ்க்கைக்கும் பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதைச் சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தனர்.

வழக்கு இன்று இன்று (பிப்.27) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் சார்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில், தீபா வழக்குத் தொடர்வதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்று தெரிவித்துள்ளார். உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர் எனக் கூறும் தீபா பலமுறை ஜெயலிதாவை தான் தொடர்புகொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்தக் கதை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் ஏற்கெனவே 'தி குயின்' என்ற பெயரில் அனிதா சிவகுமார் என்பவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளதாக மனுத்தாக்கல் செய்துள்ளார். எனவே, தீபாவின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கில் இயக்குநர் விஜய் உள்ளிட்டோர் பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது். இதையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 6-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x