Published : 10 Aug 2015 01:19 PM
Last Updated : 10 Aug 2015 01:19 PM

குடும்ப வன்முறை சட்டத்தை பழிவாங்க பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தை சிலர், தங்களுக்கு பிடிக்காதவர்களை மிரட்டுவதற்காக பயன்படுத்துகின்றனர். இது ஒரு சட்ட பயங்கரவாதமாகும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் ஆர்.ராமகிருஷ்ணன். இவரது மனைவி சாந்தினியும், மாமனார் முருகனும் வத்தலகுண்டு பகுதியில் பள்ளி நடத்தி வருகின்றனர். இந்தப் பள்ளி அங்கீகாரம் பெறாமல் நடத்தப்படுவதாகவும், சாந்தினியும், முருகனும் 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தி ருப்பதால், அவர்களுக்கு பள்ளியை நடத்துவதற்கு தகுதி யில்லை என்றும், இதனால் பள்ளியை மூட கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி ராமகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் தன் மனைவியை பழிதீர்ப்பதற்காக இந்த வழக்கை ஒரு கருவியாக பயன்படுத்தி யுள்ளார். மனைவிக்கு நிர்பந்தம் கொடுத்து குடும்பத் தகராறை தீர்க்க முயன்றுள்ளார். பள்ளியை நடத்துவோருக்கு கல்வித் தகுதி தேவையில்லை. கல்வித் தகுதி உடைய ஆசிரியர்களை நியமனம் செய்தால் போதும்.

ஏற்கெனவே ஸ்ரீவில்லி புதூரில் குடும்ப தகராறில் மாமனாரை பழிவாங்க, அரசு பதவி உள்ள மாமனாருக்கு பதவி உயர்வு வழங்கக் கூடாது என மருமகள் வழக்கு தொடர்ந்துள்ளார். இப்போது மனுதாரர் தன் சொந்த மனைவியை பழிவாங்க இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிப்பது வழக்கமாகிவிட்டது. உண்மை யிலேயே பாதிக்கப்பட்டவர்கள் இந்த சட்டத்தால் பயனடைய வேண்டும். ஆனால், குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தை சிலர், தங்களுக்கு பிடிக்காதவர்களை மிரட்டுவதற்காக பயன்படுத்து கின்றனர். தவறாக பயன்படுத்து வோருக்கும் இந்தச் சட்டம் பயன்படுவது இந்தச் சட்டத் தில் உள்ள குறையாகும். ஒருவரை பழிவாங்குவதற்காக இந்தச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவது சட்ட பயங்கரவாதமாகும். இவ்வாறு யாரும் சட்ட பயங்கரவாதத்தில் ஈடுபடக்கூடாது என பல்வேறு வழக்குகளில் நீதின்றங்கள் உத்தரவிட்டுள்ளன.

இந்த வழக்கில் மனைவி நடத்திவரும் பள்ளியை மூடுமாறு கேட்க மனுதாரருக்கு தகுதி கிடையாது. எனவே மனுதாரருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அப்பணத்தை மதுரை சேவா ஆசிரமத்துக்கு அவர் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x