Published : 27 Feb 2020 07:41 AM
Last Updated : 27 Feb 2020 07:41 AM

மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளார் சதாபிஷேக திருக்கல்யாண விழா

மேல்மருவத்தூரில் நடைபெற்ற பங்காரு அடிகளாரின் சதாபிஷேக திருக்கல்யாண விழாவையொட்டி மாலை மாற்றிக்கொண்ட தம்பதி.

காஞ்சிபுரம்

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் 80-வது பிறந்தநாளை ஒட்டி சதாபிஷேக திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது.

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் 80-வது பிறந்தநாள் விழா வரும் மார்ச் 3-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு பகுதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளாருக்கும், லட்சுமி பங்காரு அடிகளாருக்கும் சதாபிஷேக திருக்கல்யாணம்நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு சித்தர்பீடம் முழுவதும் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கருவறை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அதிகாலையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து திருமாங்கல்ய பூஜையும், சதாபிஷேக வேள்வியும் நடைபெற்றன. இதில் பல்வேறு வேள்வி குண்டங்கள் அமைக்கப்பட்டு வேள்விகள் நடைபெற்றன. இதில் லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர்.

காலையில் சித்தர் பீடத்துக்கு பங்காரு அடிகளார் மற்றும் லட்சுமி பங்காரு அடிகளார் இருவரும் ரதத்தில் அழைத்து வரப்பட்டனர். பக்தர்கள் பங்காரு அடிகளாருக்கு பாத பூஜை செய்து வரவேற்பு அளித்தனர். பின்னர் நடைபெற்ற சதாபிஷேக திருக்கல்யாணத்தில் பங்காரு அடிகளார் தனது மனைவி லட்சுமி பங்காரு அடிகளாருக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் தமிழக அமைச்சர்கள் கே.சி.வீரமணி, எம்.சி.சம்பத், கே.ஏ.செங்கோட்டையன், சி.வி.சண்முகம், பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டீக்காராமன், மாநில சட்ட மொழி ஆணையத் தலைவர் ஓய்வுபெற்றநீதிபதி கலையரசன், உறுப்பினர் சங்கர், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், பாஜக மாநிலச் செயலர் கே.டி.ராகவன், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய தலைவர் மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமார் உள்ளிட்ட பங்காரு அடிகளாரின் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x