

பிஹார் மாநிலத்தைப்போல தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (என்.ஆர்.சி) எதிராக தமிழ்நாட்டிலும் தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்பது அரசின் பரிசீலனையில் உள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
திருச்சி முக்கொம்பில் உடைந்த கொள்ளிடம் கதவணைக்குப் பதிலாக புதிய கதவணை கட்டும் பணி நடைபெற்று வருவதை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்த அவர்,பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
கதவணை பணிகள் பாதிக்காது
முக்கொம்பில் உடைந்த கொள்ளிடம் கதவணைக்குப் பதிலாக புதிய கதவணை கட்டும் பணிரூ.387.60 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை 35 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2021-ம்ஆண்டு ஜனவரி இறுதிக்குள் பணிகளை முழுமையாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு, இரவு பகலாக பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேட்டூரில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டாலும், இந்தப் பணிகள் பாதிக்காத வகையில் முன்னேற்பாடுகள் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளன.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டுக்குரிய உரிமை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக நாம் தொடர்ந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால், கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகச் செயல்படுகிறது.
மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு அரசிதழில் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
2-வது தலைநகரம் இல்லை
திருச்சி, அரியலூர், கரூர் ஆகிய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை எனக்கு வரவில்லை. இந்த மாவட்டங்களில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ள நிலையில், வேளாண் மண்டலமாக அறிவித்தால் தொழிற்சாலைகளை செயல்படுத்த முடியாது. திருச்சியை 2-வது தலைநகரமாக ஆக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இதுவரை இல்லை.
பொதுப்பணித் துறையில் 10ஆண்டுகள் பணி முடித்த கரைக்காவலர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு உத்தரவிட்டு, சுமார் 1,000 பேருக்கும் அதிகமானோரை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவிரியில் மணல் அள்ளுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சிஏஏ, தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றால் தமிழ்நாட்டில் எவ்வித பாதிப்பும் கிடையாது. தேர்தல் வியூகத்தை வகுத்து அளிக்க தனியார் நிறுவனத்தை ஆலோசகராக திமுக நியமித்துள்ளதன் மூலம் திமுகவின் பலவீனம் வெளிப்படுகிறது. இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.
அப்போது, “பாஜக கூட்டணிக்கட்சி ஆட்சி செய்யும் பிஹாரில்தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்குஎதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அதற்கான வாய்ப்பு உண்டா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “அது அரசின் பரிசீலனையில் உள்ளது” என்று முதல்வர் தெரிவித்தார். மேலும், “மீத்தேன், ஹைட்ரோகார்பன் ஆகிய திட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுமா?” என்ற கேள்விக்கு, “அதுவும் அரசின் பரிசீலனையில் உள்ளது” என்று முதல்வர் தெரிவித்தார்.