

குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகர்களில் பாஜகசார்பில் நாளை பேரணி நடத்தப்பட உள்ளது.
குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அதேநேரத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜகவினரும் பேரணி நடத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் நடந்த இருதரப்பு போராட்டத்தின்போது கலவரம் வெடித்ததில் 20-க்கும்மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பாஜக சார்பில் மாவட்டத் தலைநகர்களில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக நாளை (பிப்.28) பேரணி நடத்தப்பட உள்ளது. சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இருந்துதலைமைச் செயலகம் நோக்கியும், மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கியும் பேரணி நடக்கும் என்று பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் தெரிவித்துள்ளார்.
நாளை மாலை 3 மணிக்கு சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே தொடங்கும் பேரணியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன், நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
திருவள்ளூரில் மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.மோகன்ராஜூலு, திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா, காஞ்சிபுரத்தில் மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன், செங்கல்பட்டில் மாநிலச் செயலாளர் அனுசந்திரமவுலி பங்கேற்கின்றனர்.
சிவகங்கையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, கோவையில் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், திருப்பூரில் முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலியில் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், நாகையில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.வேதரத்தினம், திண்டுக்கல்லில் சிறுபான்மையினர் அணி தேசிய துணைத் தலைவர் முனவரி பேகம், திருவண்ணாமலையில் மாநில ஊடகப் பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாககேசவ விநாயகன் தெரிவித்துள்ளார்.